உடன் பிறப்புகளுடன் ஐக்கியமானார் தங்க தமிழ்ச்செல்வன்... மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்

Thanga Tamil Selvan meets mk Stalin and joined in Dmk

by Nagaraj, Jun 28, 2019, 13:30 PM IST

உடன் அமமுகவில் இருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் ரத்தத்தின் ரத்தமான அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில், திமுகவில் இன்று ஐக்கியமாகி விட்டார்.மு.க.ஸ்டாலினை ஆளுமை மிக்க தலைவர் என புகழாரம் சூட்டிய தங்க தமிழ்ச்செல்வன், ஒற்றைத் தலைமை உள்ள கட்சிதான் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளார்.


ஜெயலலிதா காலத்தில் தேனி மாவட்டத்தில் அவருடைய செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர் தங்க.தமிழ்ச்செல்வன். ஜெயலலிதாவுக்காக தனது ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஒரே ஏறுமுகமாகத் தான் இருந்தது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவுடன் அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்த ஜெயலலிதா, தேனி மாவட்ட அதிமுக செயலாளராக்கினார். அதன் பின் ஆண்டிபட்டி தொகுதியில் இரு முறை எம்எல்ஏவானார்.


தேனி மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு படைத்த நபராக வலம் வந்தாலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். இதனாலேயே தினகரன் பக்கம் ஒதுங்கினார். ஆனால் எம்எல்ஏ பதவியை பறிகொடுத்தது முதல் தினகரனுக்கும் தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் இடையே புகைந்து வந்த கருத்து வேறுபாடு, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியானதன் மூலம் பகிரங்கமாக வெடித்தது. இதனால் இனிமேல் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் நீடிக்கப் போவதில்லை என்பது உறுதியானது.அத்துடன் முன்கூட்டியே எடப்பாடி தரப்பு அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் ரகசிய சந்திப்பு நடத்தி, அதிமுகவில் சேர முடிவெடுத்து விட்டார் என்று பரபரப்பான பேச்சுகள் கடந்த 2 நாட்களாக றெக்கை கட்டிப் பறந்தன.


ஆனால் அதிமுகவில் தங்க .தமிழ்ச்செல்வன் இணைவதை ஓபிஎஸ் ரசிக்கவில்லை எனவும், அவர் கடும் எதிர்ப்பு காட்டியதால் எடப்பாடி தரப்பு தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இதையறிந்து திமுக தரப்பில் விறுவிறுவென காய் நகர்த்திய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எப்படியோ தங்க தமிழ்ச் செல்வனை சரிக்கட்டி திமுகவில் சேர சம்மதிக்க வைத்து விட்டதாக தெரிகிறது.


திமுகவில் சேரும் முடிவை நேற்றே எடுத்து விட்ட தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை சென்னைக்கு கிளம்ப உத்தரவிட்டார். இதனால் இன்று காலை 500க்கும் மேற்பட்ட தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் ஆஜராகினர். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி உடன்பிறப்பு கட்சியில் தங்க தமிழ்ச்செல்வன் ஐக்கியமானார்.


திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க. தமிழ்ச்செல்வன், ஒற்றைத் தலைமையில் உள்ள ஒரு கட்சி தான் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு உதாரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவராக செயல்படுகிறார். துணிச்சலான முடிவுகளையும் எடுக்கிறார். அதிமுகவில் இருந்து திமுகவில் ஏற்கனவே இணைந்த எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர் பாபு, செந்தில் பாலாஜி போன்றவர்களை மு.க.ஸ்டாலின் உரிய மரியாதை கொடுத்து அரவணைத்துள்ளார். அதே போன்ற என் செயல்பாடுகளைப் பார்த்து மு.க.ஸ்டாலின், உரிய பொறுப்புகளை வழங்குவார் என்று நம்புகிறேன் என்ற தங்க.தமிழ்ச்செல்வன், தன்மானம் இடம் கொடுக்காததாலேயே அதிமுகவில் இணைய விரும்பவில்லை என்றும் காரணம் தெரிவித்தார். தேனியில் மிகப் பெரும் மாநாடு போல் கூட்டம் நடத்தி, தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்றும் தங்க. தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.

You'r reading உடன் பிறப்புகளுடன் ஐக்கியமானார் தங்க தமிழ்ச்செல்வன்... மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை