திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா அல்லது பிழைக்க வந்த பித்தளையா என்று தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பு தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஆதரவு தருகிறதா? அல்லது அ.தி.மு.க.வை கைவிட்டு விட்டதா என்பதே தெரியவில்லை. மாநில பா.ஜ.க.வினருக்கும் தலைமையின் கருத்து தெரியவில்லை போலும். அதனால், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தினமும் தி.மு.க.வை மட்டும் விமர்சித்து வருகிறார். தி.மு.க.வின் புதிய எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிப்பதைக் கூட கிண்டலடித்து ட்விட் செய்திருந்தார். இதற்கு கரூர் காங்கிரஸ் பெண் எம்பி ஜோதிமணி கடும் ஆட்சேபம் தெரிவித்து ட்விட் செய்தார்.
இந்நிலையில், தமிழிசை மீண்டும் தி.மு.க.வை சீண்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தங்கதமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார்...செய்தி... நேற்றைய ஹீரோ- இன்று ஜீரோ- நாளை யாரோ?
அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்? ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை. இதில் எங்கே பாஜக இயக்குகிறது.
அற்ற குளத்தின் அறுநீர் பறவை போல் உற்றுழித்தீர்வார் உறவல்லவர்! ஆட்சி மாற்றம்வரும்! வரும்! என தினமும் ஆரூடம் சொல்லிய திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா? பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும்
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார். இதற்கு தி.மு.க.வினர் பலரும் பதிலடி கொடுத்துள்ளனர். ஒருவர், ‘‘திமுகவில் இருந்து நெப்போலியன், அதிமுகவில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த போது மட்டும் இனித்ததோ?’’ என்று கேட்டிருக்கிறார்.