சென்னை குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விமர்சித்தது குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியது, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய மு.க.ஸ்டாலின், சென்னை குடிநீர் பிரச்னை தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தது குறித்துப் பேசினார். ஆனால் அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். மு.க. ஸ்டாலின் பேச்சை அவைக் குறிப்பில் நீக்கியதை எதிர்த்தும், கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக மக்களை கிரண்பேடி அவமதிக்கிறார். அவரது கருத்தைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம். கிரண்பேடி பற்றி சபையில் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். எனவே தமிழக அரசை குறை கூறி கிரண்பேடி தெரிவித்ததை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னையில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், வித்தியாசமான அதிகாரத்துவம் ஆகியவையே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.