லோன் தர்றியா, சுட்டுத் தள்ளவா? பீதியில் பீகார் வங்கி அதிகாரிகள்

Give loan or get bullet: Bihar bankers face difficult choice

by எஸ். எம். கணபதி, Jul 1, 2019, 13:07 PM IST

பீகாரில் சமீப காலமாக கடன் தர மறுக்கும் வங்கி அதிகாரிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனால், வங்கி அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பீகாரில் குண்டர்களை ஒடுக்குவதற்கு எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ரவுடியிசம் குறையவே இல்லை . அரசியல்வாதிகளின் ஆதரவில் பல தொழில்களில் குண்டர்கள் தலையிடுவது சகஜமாக உள்ளது.

தற்போது கடன் தர மறுக்கும் வங்கி அதிகாரிகளை குறிவைத்து கொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. அங்கு லகிசாரை மாவட்டத்தில் பேட்டையா பகுதில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக இருந்தவர் மிலிந்த் குமார்(28). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கயாவில் இருந்து ஜமூய் நகருக்கு ஜமல்பூர் பாசஞ்சர் ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று பேர் வந்து அவரை சரமாரியாக கத்தியால் குத்தி ெகாலை செய்து விட்டு தப்பினர். அவரிடம் இருந்து பர்ஸ் உள்பட எதையும் கொலைகாரர்கள் எடுக்கவில்லை.

இது பற்றி விசாரணை நடத்திய போலீசார், வங்கியில் கடன் தர மறுத்த காரணத்திற்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், கிராம வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றிய ஜெயவர்த்தன் என்பவர் கொல்லப்பட்டார். அவரது சடலம் அவர் இறந்து சில நாட்களுக்கு பிறகு ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள தெலய்யா அணையில் கண்டெடுக்கப்பட்டது. அவரும் வங்கியில் லோன் தர மறுத்த காரணத்தால்தான் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அதே போல், அதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் ஆர்வல் பகுதி பரோடா வங்கிக் கிளையின் மேலாளர் அலோக் சந்திரா சுட்டுக் ெகால்லப்பட்டார். அந்த கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் இருசக்கர வாகன டீலர். அவர் அந்த கடையின் பெயரில் வாங்கிய கடன் ஒன்றரைக் கோடி ரூபாயை வேறு விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் சந்திரா நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, அந்த டீலர் தனது ஆட்களுடன் சென்று அலோக் சந்திராவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து பாட்னா மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு ரூ.5கோடி வரை கிராமப்புறங்களில் கடன் வழங்குகிறது. இந்த கடனை யாருக்கு தர வேண்டும் என்று குண்டர்களும், அரசியல்வாதிகளும்தான் முடிவு செய்கிறார்கள். அதை எதிர்த்தால் வங்கி அதிகாரியை கொலை செய்கிறார்கள். இதனால், வங்கிகளில் வராக்கடன்கள் அதிகரித்து கொண்டே போகிறது’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பீகாரில் வங்கி அதிகாரிகள் பீதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, ரவுடியிசம் அதிகமாக உள்ள கிராமப்புறங்களுக்கு அவர்கள் பணியாற்றச் செல்ல மறுத்து வருகின்றனர்.

வலிமையான எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு பலம்

You'r reading லோன் தர்றியா, சுட்டுத் தள்ளவா? பீதியில் பீகார் வங்கி அதிகாரிகள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை