வாஸ்துக்காக 10 கட்டடத்தை இடிப்பதா? காங்கிரஸ் கேள்வி

No need for new Secretariat: Telangana Congress slams CM KCRs plans

by எஸ். எம். கணபதி, Jul 2, 2019, 10:53 AM IST

‘தெலங்கானா தலைமைச் செயலகத்தில் வாஸ்து பிரச்னைக்காக 10 கட்டடங்களை இடிக்க நினைக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐதரபாத்தில் ஹூசைன் சாகர் ஏரிக்கு அருகே தெலங்கானா மாநிலத்தின் தலைமைச் செயலகம் உள்ளது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தலைமைச் செயலக வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த தலைமைச் செயலகம், பிரிக்கப்படாத ஆந்திராவின் தலைமைச் செயலகமாக இருந்தது.

கடந்த 2014ம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களின் தலைமைச் செயலகங்களும் இதே வளாகத்தில் இயங்கி வந்தன. ஆனால், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் கொடுத்த நெருக்கடி காரணமாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சில மாதங்களிலேயே அமராவதியில் தற்காலிக தலைமைச் செயலகம் கட்டி அங்கு மாற்றி விட்டார்.

தற்போது ஐதராபாத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டடங்களை இடித்து விட்டு ரூ.400 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு சந்திரசேகரராவ் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த ஜூன் 27ம் தேதி, அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால், இந்த புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் மல்லுபட்டி விக்ரமர்கா தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டடங்களை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தனர். பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இப்போதுள்ள தலைமைச் செயலகம் 25 ஏக்கர் பரப்பளவில் நல்ல வசதியுள்ள கட்டடங்களுடன் இருக்கிறது. எனவே, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியமே இல்லை. நன்றாக உள்ள 10 கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக கட்டுவது என்பது மக்கள் பணத்தை வீணடிப்பதாகும். வாஸ்து பிரச்னை, முதலமைச்சரை வாட்டுகிறது. அதற்காக, 10 கட்டடங்களை இடிக்க நினைக்கிறார். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஒன்றும் அவரது குடும்ப விவகாரம் அல்ல. அவர் விருப்பத்திற்கு கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்டடங்களை கட்டுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது? எல்லோரிடமும் ஆலோசித்த பின்பே முடிவெடுக்கலாம். எனவே, ரூ.400 கோடி வீணடிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்து ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
ஐதராபாத்தில் தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு இருந்த போது, வாஸ்து பார்த்து அவரது அலுவலக கட்டடத்தை மாற்றிமைத்தார். சந்திரசேகர ராவும் பல முறை வாஸ்து பார்த்து அலுவலகத்தை மாற்றியிருக்கிறார். ஏனோ, அவர்கள் இருவரையும் வாஸ்து பயம், படாதபாடு படுத்துகிறது.

பா.ஜ.க.வுடன் ஜெகன் ரகசிய உறவு; கரைக்கப்படுகிறதா தெலுங்குதேசம்?

You'r reading வாஸ்துக்காக 10 கட்டடத்தை இடிப்பதா? காங்கிரஸ் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை