48 நாள் அமைச்சர் என்று டிடிவி கிண்டல் செய்தார்... தாய் கழகத்திற்கே செல்கிறேன்..! இசக்கி சுப்பையா பளிச்

Ex minister Esakki subbiah exits ammk and announced to join admk

by Nagaraj, Jul 2, 2019, 12:48 PM IST

வெறும் 48 நாள் அமைச்சராக இருந்தவர் என்று என்னை டிடிவி தினகரன் கிண்டல் செய்து வேதனைப்படுத்தினார் என்று குற்றம் சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி, தமது தொண்டர்களுடன் தாய்க்கழகமான அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் கலகக் குரல் வெடித்துள்ளது. அமமுக கூடாரத்திலிருந்து முக்கியப் புள்ளிகளும், நிர்வாகிகள் பலரும் ஓட்டம் பிடித்து வருவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இதற்கெல்லாம் டிடிவி தினகரனின் செயல்பாடுகளே காரணம் என்றும் கூறப்படுகிறது. அடுத்தபடியாக இருந்தால் இருங்கள், வேறு கட்சிக்கு போக வேண்டுமென்று நினைத்தால் தாராளமாக போகலாம் என்று நிர்வாகிகளை விட்டேத்தியாக பேச, விறுவிறுவென பலரும் நடையைக் கட்ட ஆரம்பித்துள்ளனர்.

டிடிவி தினகரனுக்கு அரசியல் ரீதியில் ஆல் இன் ஆல் என கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் கெத்தாக வலம் வந்த தங்க தமிழ்ச்செல்வன், தினகரனுக்கு எதிராக தாம் பேசிய ஒரு ஆடியோவை கசியவிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார். அதே வேகத்தில் அதிமுகவில் இணையப் போகிறார் என்று செய்திகள் வெளியாக, திமுகவில் ஐக்கியமாகி தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அமமுகவில் மாநில அளவில் முக்கிய நிர்வாகியாகவும், நன்கு வைட்டமின் 'ப' பசையுள்ள முக்கியப் புள்ளியான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தினகரன் மேல் அடுக்கடுக்கான புகார்களைக் கூறி அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக முக்கிய முடிவை இன்று அறிவிக்கப் போவதாக நேற்று மாலையில் தகவல் கூறியிருந்த இசக்கி சுப்பையா இன்று குற்றாலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சில நிமிடங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. 48 நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்தவர் என்று தினகரன் என்னை கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல. டிடிவி தினகரன் பதற்றத்தில் இருக்கிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டுத் தான் கட்சிக்கு வந்தோம். டிடிவி தினகரனே தொண்டர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்தான்.
வரும் 6-ந்தேதி அதிமுகவில் 20 ஆயிரம் தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். சுயநலம் பார்ப்பதாக இருந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வில் சேர்ந்து இருப்பேன். திமுகவில் இருந்தும் அழைப்பு வந்தது. தொண்டர்களின் விருப்பப்படி தாய்க் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளோம் என்று இசக்கி சுப்பையா தெரிவித்தார்.

அரசியல்வாதியாக மட்டுமின்றி பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இசக்கி சுப்பையா பெரும் தொழிலதிபராகவும் உள்ளார். சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வரும் இடமும் இவருக்கு சொந்தமானது தான். கடந்த தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இசக்கி சுப்பையா தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடன் பிறப்புகளுடன் ஐக்கியமானார் தங்க தமிழ்ச்செல்வன்... மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்

You'r reading 48 நாள் அமைச்சர் என்று டிடிவி கிண்டல் செய்தார்... தாய் கழகத்திற்கே செல்கிறேன்..! இசக்கி சுப்பையா பளிச் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை