ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் . இதனால் திக்.. திக்.. மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ். தரப்புக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். அப்போது தன்னை சசிகலா குடும்பம் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக குற்றம்சாட்டி தர்மயுத்தம் நடத்தினார். ஆனாலும், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி விட்டார். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் கைகோர்த்து, சசிகலா குடும்பத்தை ஒதுக்கித் தள்ளினர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அம்மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்(இப்போது திமுகவில் உள்ளார்) உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதியன்று இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தது.
ஆனால், மேலும் சில நாட்களுக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க. தரப்பிலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
அக்டோபர் 30-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனால் விசாரணை தள்ளிப் போனது.
இந்நிலையில், தங்கத்தமிழ்ச் செல்வன் சார்பில் சீனியர் வழக்கறிஞர் கபில்சிபல், நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ தகுதிநீக்க வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி,ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோரை கொண்ட புதிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைத்தனர். இரண்டு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதால், விசாரணையில் என்ன ஆகுமோ என்ற திக்.. திக்... மனநிலையில் இருந்த ஓபிஎஸ் தரப்புக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.