ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரிக்க திமுக கோரிக்கை

Dmk seeks urgent hearing on its ples for disqulification of 11 mlas including ops

by எஸ். எம். கணபதி, Jul 2, 2019, 11:57 AM IST

ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கை விரைவில்
விசாரிக்குமாறு திமுக வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பின், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். அப்போது தன்னை சசிகலா குடும்பம் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக குற்றம்சாட்டி தர்மயுத்தம் நடத்தினார். ஆனாலும், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி விட்டார். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் கைகோர்த்து, சசிகலா குடும்பத்தை ஒதுக்கித் தள்ளினர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடியானது.

இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்(இப்போது திமுகவில் உள்ளார்) உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட், கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தது. ஆனால், மேலும் சில நாட்களுக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க. தரப்பிலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அக்டோபர் 30ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனால் விசாரணை தள்ளிப் போனது.

இந்நிலையில், தங்கத்தமிழ்ச் செல்வன் சார்பில் சீனியர் வழக்கறிஞர் கபில்சிபல் இன்று(ஜூலை2) காலை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரின் தகுதிநீக்க வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஏற்றுக் கொண்டார். விரைவில் புதிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வரும் என்று அவர் அறிவித்தார்.
3 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு முன்பு, எடப்பாடி அரசுக்கு சட்டசபையில் பெரும்பான்மை இழுபறியாக இருந்தது. இந்த சமயத்தில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோரை ஏன் தகுதநீக்கம் செய்யக் கூடாது என்று கேட்டு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

உடனே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இதையடுத்து, கள்ளக்குறிச்சி பிரபு உள்பட 3 பேரும், சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சபாநாயகர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால், தங்களை தகுதிநீக்கம் செய்ய அவருக்கு தார்மீக உரிமை இல்லை என்று அவர்கள் தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து, 3 பேர் மீதான சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் உடனடியாக விசாரணை நடத்த தமிழக அரசின் சார்பில் இன்று கோரிக்கை விடப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது. எனவே, சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்குமா என்பது தொடர்பான வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட உள்ளன. இதனால், எடப்பாடி ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை - மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்

You'r reading ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரிக்க திமுக கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை