மத்திய அரசு பணிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஏழு லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் வேலையில்லத் திண்டாட்டம் அதிகரி்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், மத்திய அரசில் 7 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர் தர்ஷணா ஜர்தேஷ், காங்கிரஸ் உறுப்பினர் தீபக் பைஜ் ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார் கூறியதாவது:
மத்திய அரசில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் இறுதி வரை 7 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை எத்தனை இடங்கள் காலியாக உள்ளது என்பது தெரியவில்லை. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாநில அரசுகளும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
மத்திய அரசின் துறைகளில் மொத்தம் 38 லட்சத்து 3 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 31 லட்சத்து 19 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. ரயில்வே துறையில் மட்டுமே 2 லட்சத்து 60 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை வரும் ஆண்டில் விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சந்தோஷ் கேங்வார் தெரிவித்தார்.