சட்டசபையில் ஜூலை 3ம் தேதி கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, ‘‘பத்து பொருத்தங்களில் 8 பொருத்தம் சரியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பெண்ணை திருமணம் ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அவருக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லாததால் அந்தத் திருமணம் நடைபெறாமல் போனது. ஆனால், அ.தி.மு.க.வுக்குத்தான் எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கிறது. அதனால், அ.தி.மு.க.தான் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, ‘`பத்து பொருத்தமும் சரியாக இருந்தால், அந்தத் திருமணம் நடக்காது என்று சொல்வார்கள். அப்படியும் நடந்தால் அந்த குடும்பத்தில் ஒருவர் இறந்து விடுவாராம்’’ என்று கிண்டலாக பதில் கூறினார்.
உடனே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ''எங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். தி.மு.க.வுக்குத்தான் ஜாதகம் சரியில்லை. அதனால்தான், மேலேயும்(மத்திய அரசு) இல்லாமல், கீழேயும்(மாநில அரசு) இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஜாதகத்தை நம்புவதால் நன்றாக இருக்கிறோம், நீங்கள் ஜாதகத்தை நம்பாததால்தான் இப்படி இருக்கிறீர்கள்” என்று கிண்டலாக பதிலளித்தார்.