எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் மீண்டும் துவங்கி விட்டதா? : ஸ்டாலின்

m.k.stalin condemns modi goverment for filing appeal in salem 8 way scheme

by எஸ். எம். கணபதி, May 31, 2019, 17:43 PM IST

சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவு வெளியான போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது” என்று வாக்குறுதி அளித்தார். அதைச் சொல்லி வாக்கு கேட்டார்.

ஆனால் முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு “சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது அதற்கு எதிர்ப்புக் கூட தெரிவிக்காமல் முதலமைச்சர் அமைதி காத்தார். அவரது கூட்டணிக் கட்சித் தலைவரான ராமதாசும் மவுனமாகவே மேடையில் அமர்ந்திருந்தார். இப்போது அது தொடர்கிறது.

தற்போது, அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்த பிறகு - குறிப்பாக முதலமைச்சரின் மாவட்டத்திலேயே தோற்ற பிறகு - எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். ஒரு பாராளுமன்றத் தொகுதியில் கூட தங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்ற கோபத்திலும் - எரிச்சலிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூடக் கொடுக்காமல் அவமதித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பதவியேற்ற அடுத்த நாளே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
“பதவி” கேட்ட அ.தி.மு.க அரசை “பக்குவமாக” மிரட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உடந்தையாக இருக்க வைத்துள்ளது. ஆகவே, எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தொடங்கி விட்டது என்பதையே இந்த மேல்முறையீடு காட்டுகிறது.

விவசாயிகள், தாய்மார்கள், அப்பாவி மக்கள் என்று அனைவரையும் காவல்துறையை வைத்து மிரட்டியது - அடக்குமுறை மூலம் இந்த சாலைத் திட்டத்தை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு எடுத்த முயற்சிகளை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. ஆனாலும் கூட அ.தி.மு.க அரசும், மத்திய பா.ஜ.க. அரசும் மனம் திருந்தவில்லை.

பதவியேற்று கையெழுத்திட்ட பேனாவின் மை காய்வதற்குள் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு துடிப்பதையும், அ.தி.மு.க அரசு அதற்கு சரணாகதி அடைந்து நின்று தூபம் போடுவதையும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் படுதோல்வியை பரிசாக மக்கள் கொடுத்தும், இன்னும் இரு அரசுகளுமே பாடம் கற்கவில்லை.

தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும்- தமிழக மக்களை வஞ்சித்து பழி வாங்க துடிப்பதையும் கைவிடவில்லை. “அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் மோடி அரசின் செயல்பாடு பதவியேற்ற அடுத்த நாளே தமிழ்நாட்டிற்கு விரோதமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பா.ஜ.க அரசு இனிமேலும் விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியுள்ள இந்த சாலைத் திட்டத்தை கைவிட்டு, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளை யோசிக்க மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் மீண்டும் துவங்கி விட்டதா? : ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை