உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏதேனும் பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அந்த அதிசயம் என்னவென்றால் வங்கதேசத்துடனான போட்டியில் பாகிஸ்தான் முதலில் ஆடி 350 ரன் குவிக்க வேண்டும். பின்னர் வங்கதேசத்தை 39 ரன்னில் சுருட்ட வேண்டும். இந்த அதிசயம் நிகழுமா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது.லீக் போட்டிகளின் கடைசிக் கட்டத்தில், அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? என்பதில் அணிகளிடையே போட்டா போட்டியே ஏற்பட்டுவிட்டது. அதிலும் நான்காவது இடத்துக்குத் தான் முட்டல் மோதலாகிப் போனது. இங்கிலாந்து, பாகிஸ்தான்,இலங்கை, வங்கதேசம் என 4 அணிகளும் 4 - வது இடத்துக்கு போட்டா போட்டி போட கடைசியில் இங்கிலாந்து 3-வது இடத்துக்கு கெத்தாக முன்னேறி விட்டது. இப்போது 4-வது இடம் நியூசிலாந்துக்கா? பாகிஸ்தானுக்கா? என்ற நிலைமைக்கு வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா (14), இந்தியா (13), இங்கிலாந்து (12) அணிகள் முதல் 3 இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. அடுத்த இடத்தில் 11 புள்ளிகளுடன் நியூசிலாந்து உள்ளது. ஆனால் 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், இன்னும் ஒரு போட்டி வங்கதேசத்துடன் ஆட வேண்டி உள்ளது. நாளை நடைபெறும் இந்தப் போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வென்றால் 11 புள்ளிகளை எட்டிவிடும். அப்போது நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி யாருக்கு? என்பது முடிவாகும். இதனால் நாளைய போட்டி வரை சஸ்பென்ஸ் நீடிக்க உள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் என்னென்ன நடக்க வேண்டும் தெரியுமா? தற்போது நெட் ரன்ரேட் பார்த்தால் நியூசிலாந்துக்கு + O.175 உள்ளது.பாகிஸ்தானோ - 0.934 என உள்ளது. இதனால் நாளைய போட்டியில் முதலில் பாகிஸ்தான் டாஸ் ஜெயிக்க வேண்டும். அப்புறம் முதலில் பேட் செய்ய வேண்டும். அதற்கடுத்து 350 ரன்னுக்கு மேல் கட்டாயம் குவிக்க வேண்டும்.
அதன் பின் என்ன நடக்க வேண்டும் தெரியுமா? பாகிஸ்தான் 350 ரன் எடுத்திருந்தால் வங்கதேசத்தை 39 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கி 311 ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்.400 ரன் எடுத்தால் 84 ரன்களுக்குள் வங்கதேசத்தை சுருட்டி, 316 ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். அதற்கும் மேலாக 450 ரன்களை பாகிஸ்தான் குவித்தால், வங்கதேசத்தை 129 ரன்களுக்குள் மூட்டை கட்டி அனுப்பி 321 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டும்.
இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எல்லாம் அதிசயமாக நடந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப் பாம். இவையெல்லாம் சாத்தியம்தானா? என்றால் சந்தேகம் தான். ஒரு வேளை நாளை டாஸில் தோற்றாலே பாகிஸ்தானின் கதை அப்போதே முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.