முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது. தமிழகத்திலும் இதை நிறைவேற்றும் வகையில் பிராமணர் உள்பட முன்னேறிய வகுப்பினருக்கும் ஜாதிச் சான்றிதழ் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்று மத்திய பா.ஜ.க அரசு கூறுவது, தமிழகத்தில் சமூக மற்றும் கல்வி அடிப்படையில், பின்தங்கிய பிரிவினர் இடஒதுக்கீட்டை அறவே அது நீர்த்துப் போக வைக்கும் திட்டமிட்ட நடவடிக்கை. இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது’’ என்று கூறினார்.
அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கும் போது, ‘‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பின்பற்றப்படும். முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு குறித்து மற்ற கட்சிகளுடைய கருத்துக்களை கேட்டுதான் அரசு செயல்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து இதை என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டு அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
இந்நிலையில், வரும் 8ம் தேதி மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடக்கவிருப்பதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் படுத்துவது தொடர்பாக கருத்துகள் கேட்க இக்கூட்டம் நடப்பதாகவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.