உயர்சாதியினருக்கு 10% ஒதுக்கீடு இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

TN CM to chair all-party meet on EWS quota

by எஸ். எம். கணபதி, Jul 8, 2019, 08:42 AM IST

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க. சட்டம் இயற்றியது. இந்த சட்டம் சில மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதல் கட்டமாக பிராமணர் உள்பட உயர்சாதியினருக்கும் சாதிச் சான்றிதழ் கொடுக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், 10 சதவீத ஒதுக்கீடு சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

காரணம், தமிழகத்தில் ஏற்கனவே எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கன தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால், இந்த கூடுதல் 19 சதவீத ஒதுக்கீட்டிற்கு தமிழகத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு அரசியல்சட்டப் சட்டப்பாதுகாப்பு பெறப்பட்டுள்ளது. மேலும், 19 சதவீத ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் உயர்சாதி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் அது சமூகநீதிக்கு எதிரானது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, சட்டசபையில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டு முடிவெடுக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (ஜூலை 8) மாலை 5.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் அரசு தரப்பில் கலந்துகொள்கின்றனர்.

தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சி தலைவர்மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட பலரும் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இதில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால் ஏற்படும் சட்டப் பிரச்னை, சமூகப் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிகிறது.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

You'r reading உயர்சாதியினருக்கு 10% ஒதுக்கீடு இன்று மாலை சர்வகட்சி கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை