திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பாமக பிரமுகரான ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கொல்லப்பட்டார். மதமாற்றப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தடுத்ததாலேயே அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்தக் கொலையில் சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதனால் இந்தக் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதனால் கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, முதலில் மணப்பாறையைச் சேர்ந்த முகமது பாரூக் என்பவரைக் கைது செய்தனர்.தொடர்ச்சியாக திருவிடைமருதூரைச் சேர்ந்த மைதீன் அகமது சாலி என்பவரை கடந்த வாரம் கொச்சியில் கைது செய்தனர். சாலியின் பூர்வகம் நெல்லை மாவட்டம் தென்காசி ஆகும்.
இந்நிலையில் தென்காசியில் இன்று காலை கொச்சியில் இருந்து வந்த என்ஜஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சாலியின் வீட்டில் பல மணி நேரம் அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனையால், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு இப்போது மேலும் திருப்பங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.