தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெளியிட்டார். 2019-2020 கல்வி ஆண்டில் பி.வி.எஸ்.சி படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். மூவரும் 200 க்கு 199 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 125 கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. வரும் ஆண்டில் அதைவிட அதிகமாக கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கிளை மருத்துவமனைகள், மருந்தகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிக்காக நவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 1800 ஏக்கர் பரப்பளவில் உலகில் இருக்கக்கூடிய அனைத்து கால்நடை உயிரினங்களையும் வளர்ப்பது, அதன் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அதனை விவசாயிகளுக்கு வழங்குவது மற்றும் விற்பனை பெருக்குவது ஆகியவை குறித்து முழுவதுமாக ஆராய்ச்சி என்ற அடிப்படையில் நவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பேசினார்.
அமெரிக்காவின் ஒக்லஹாமா யுனிவர்சிட்டியுடன் ஒப்பந்தம் போடப்பட்டு, அங்கிருந்து 6 மாணவர்கள் பயிற்சிக்காக தமிழகம் வந்துள்ளதாகவும், தமிழகத்தில் இருக்கக்கூடிய கால்நடை மருத்துவமனைகளிலிருந்து, நான்கு மாணவர்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்லவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.