சென்னை மெரினா கடற்கரையில், நாய் ஒன்று கடித்ததில் ரேபிஸ் ஏற்பட்டு குதிரை உயிரிழக்கவே, சவாரிக்காக பயன்படுத்தப்படும் அனைத்துக் குதிரைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சிவா என்பவர், தனக்குச் சொந்தமான குதிரை மூலம், மெரினா கடற்கரையில் கட்டணச் சவாரி தொழில் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன் வழக்கம் போல் மெரினா கடற்கரைக்கு சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட குதிரையை அங்கு உள்ள நாய் ஒன்று கடித்துள்ளது. இதை குதிரை பராமரிப்பாளரான சிவா கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நாய் கடித்ததால் அந்தக் குதிரைக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பரிதாபமானது.
வாயில் இருந்து அதிக அளவில் உமிழ்நீர் வெளியேறியும், மரக்கட்டை போன்ற பொருட்களையும் குதிரை கடிக்கத் தொடங்கியதால் சந்தேகம் அடைந்த சிவா, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தனது குதிரையை அழைத்துச் சென்றார். அங்கு குதிரைக்கு ரேபிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கள் கிழமை அன்று குதிரை உயிரிழந்தது.
மற்ற குதிரைகளுக்கும் இதுபோல் ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மெரினா கடற்கரையில் கட்டணச் சவாரிக்காக குதிரை வளர்க்கும் அனைவருக்கும் கால்நடை துயர் துடைப்புக் கழகம் அழைப்பு விடுத்தது. அதன் பேரில் 30க்கும் மேற்பட்ட குதிரைகளுடன், பராமரிப்பாளர்கள் அங்கு சென்றனர். வேப்பேரியில் உள்ள கால்நடை துயர் துடைப்புக் கழகத்தில் அனைத்து குதிரைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
மெரினா கடற்கரை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றிடம் இருந்து மனிதர்களையும், வாயில்லா ஜீவன்களையும் பாதுகாக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.