மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் தொடர்பான வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்தவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம். கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று திருபுவனத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிலர் மதபிரசங்கம் செய்துகொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக சென்ற ராமலிங்கம் மத பிரசங்கம் செய்தவர்களுக்கு எதிராக நடந்துகொண்டார், அங்கிருந்த இஸ்லாமியரின் குள்ளாவை வாங்கி தன் தலையில் போட்டுக்கொண்டு, அவர்கள் நெற்றியில் விபூதியை பூசி ஆக்ரோஷமாக பேசினார், இந்த சம்பவம் சமூக வளைதலங்களில் வைரலாகி பரபரப்பானது.
இந்த நிலமையில் அன்று பணிகளை முடித்துவிட்டு தனது மூத்தமகனோடு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார் ராமலிங்கம். அப்போது இடைமறித்த சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், நிஜாம் அலி, முகமது பர்வீஸ், முகம்மது தவ்பீக், சர்புதீன், முகமது ரியாஸ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில், கடந்த 29ம் தேதி கொச்சின் தேசிய புலனாய்வு அமைப்பினர், எஸ்.பி. சவுக்கத்அலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் ஒரு பகுதியாக, திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் சிறையில் உள்ள 11 பேரின் பெயர், முகவரி, குற்ற வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்று, சம்பந்தப்பட்ட 11 பேரின் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடந்தது. இந்த சோதனை திருச்சி, தஞ்சை, கும்பகோணம் மற்றும் காரைக்காலில் மொத்தம் 20 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 4 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பிற்பகல் 2 மணிவரை நீடித்த சோதனையில், 3 பைகளில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வீட்டில் இருந்த இருவரையும் விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.