ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ இன்று மனுவை திரும்பப் பெற்றதால் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் தொமுச தலைவர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன், கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோருடன், கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பு மனு செய்தனர்.
இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி ஆகலாம் என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் அவசர, அவசரமாக கடைசி நாளில் திமுக சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்தார். வைகோ மனு ஏற்கப்பட்டால் இளங்கோ மனுவை வாபஸ் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனையின் போது, வைகோவின் மனுவுக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்காததால் அவருடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் என்.ஆர். இளங்கோ, இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால் தற்போது 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக உள்ளனர்.
எனவே திமுக சார்பில் சண்முகம், வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும், அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வாவது உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு வேட்பு மனு வாபசுக்கு கடைசி நாளான நாளை மாலை வெளியாகும் எனத் தெரிகிறது.