உத்தரகாண்டில் போதையில் துப்பாக்கியுடன் டான்ஸ் ஆடிய பாஜக எம்.எல்.ஏ. தற்போது தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். அவரை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்திருக்கிறது.
உத்தரகாண்ட் பாஜகவில் எம்.எல்.ஏ.வாக உள்ள பிரணவ் சாம்பியன் ஏற்கனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அவர் போதையில், இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாக பரவியது. இதில் அவர் இரண்டு கைகளிலும் துப்பாக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்.
இந்த வீடியோ வைரலானதும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘என்னை மீடியா குறிவைத்து தாக்குகிறது. வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். நான் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறேன். குடித்து விட்டு டான்ஸ் ஆடுவது தப்பா? லைசென்ஸ் உள்ள துப்பாக்கியை கையில் வைத்திருப்பது தப்பா?’’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் அனில் பலூனி கூறுகையில், ‘‘இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து உத்தரகாண்ட் பாஜக தலைமையிடம் விசாரிக்கப்படும்’’ என்றார்.
இந்நிலையில், பிரணவ் சாம்பியன் தனக்கும், தனது குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வருவதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி, டேராடூன் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதற்கிடையே, அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பாஜக அகில இந்திய தலைமைக்கு மாநில தலைவர் பரிந்துரை செய்திருக்கிறார்.