கர்நாடக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார். கொறடா உத்தரவு, எம்எல்ஏக்கள் கடத்தல் போன்ற சட்டப் பிரச்னையை கையில் எடுத்து காலதாமதம் செய்யும் ஆளும் தரப்பு, ஆளுநரின் உத்தரவுக்கு பணிந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமா? என்ற கேள்வி எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் நாடகமே அரங்கேறி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில், நேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலே, இன்று காலை 11 மணி வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று இரவுக்குள் ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க ஆளுநர் உத்தரவிட்டும், சபையை ஒத்தி வைத்ததைக் கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் இரவு முழுவதும் படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் 13 மாத கால ஆட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளையும் சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி இழந்து, ஆட்சியும் பறிபோகும் சூழல் உறுதியாகிவிட்டது. இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்க நேற்று சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வந்தார். ஆனால் வாக்கெடுப்பை நடத்தாமல், சட்டப்பேரவையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆளும் தரப்பில் பெரும் சந்தேகங்களை எழுப்பினர்.
கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமய்யா பிரச்னை எழுப்பினார். தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீ மந்த் படேலை பாஜகவினர் கடத்திச் சென்று விட்டனர். அதற்கான ஆதாரம் உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை மீட்டு சபைக்கு அழைத்து வர வேண்டும் என அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றொரு பிரச்னையை எழுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை கால தாமதம் செய்தார். இதனால் சட்டப்பேரவையில் அமளி துமளியாகி 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, பாஜக தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க உத்தரவிடக் கோரி, ஆளுநரிடம் முறையிட்டனர். ஆளுநரும் இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். ஆனாலும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள், கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான பிரச்னையை தொடர்ந்து எழுப்ப மீண்டும் அமளி ஏற்பட்டு சட்டப் பேரவையை இன்று காலை 11 மணி வரைக்கும் சபாநாயகர் ஒத்திவைத்தார். இதை எதிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தர்ணா நடத்தியதுடன் இரவு முழுவதும் அங்கேயே படுத்துறங்கினர்.
இந்நிலையில் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா நேற்றிரவு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதித்து முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகருக்கும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று ஆளுநர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா?அல்லது சட்டப் பிரச்னையை கையிலெடுத்து, ஆளும் தரப்பு காலதாமதம் செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, தெளிவு படுத்தக்கோரி ஆளும் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.