நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா..?- கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு

Karnataka political crisis: can CM Kumaraswamy wins trust vote today, tension in Bangalore

by Nagaraj, Jul 18, 2019, 09:17 AM IST

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணி நடைபெற உள்ள நிலையில், ஆட்சி தப்பிப் பிழைக்குமா? கவிழுமா? என்ற உச்சகட்ட பரபரப்பு கர்நாடக அரசியலில் நிலவுகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 224. பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள். இதில் காங்கிரஸ் (79), மதச்சார்பற்ற ஜனதா தளம் (37), இரு சுயேட்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆதரவு என மொத்தம் 119 பேர் பலத்துடன் குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. பாஜகவின் பலம் 105 ஆக இருந்தது.

இப்போது, காங்கிரசின் 13 எம்எல்ஏக்களும், மஜதவின் 3 பேரும் அதிருப்தியாளர்களாக மாறி, ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துவிட்டனர். சுயேட்சைகள் 2 பேரும் ஆதரவை வாபஸ் பெற்று விட்டனர். இதனால் 16 அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டாலோ, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலோ, பேரவையில் எம்எல்ஏக்களின் பலம் 208 ஆகிவிடும்.மெஜாரிட்டிக்கு105 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால் குமாரசாமி அரசின் பலம் இப்போது 101 என்றாகிவிட்டது. பாஜகவுக்கோ 105 எம்எல்ஏக்களுடன் 2 சுயேட்சைகளும் ஆதரவாக இருப்பதால் 107 பேரின் ஆதரவு கிட்டும். இதனால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழவே அதிக வாய்ப்புள்ளது.

அரசைக் காப்பாற்ற கடைசி நேரத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் பலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் நேற்றும் சந்திக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் போலீசார் அவரை தடுத்து விட்டனர்.

இதனால் இன்றைய வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு காங்கிரசும், மஜதவும் நேற்றிரவு கொறடா உத்தரவும் பிறப்பித்தன. வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலோ, எதிர்த்து வாக்களித்தாலோ கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது.

இதனால் கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், 7 முறை எம்எல்ஏவுமான ராமலிங்க ரெட்டி என்பவர் மட்டுமே நேற்றிரவு தனது நிலைப்பாட்டை மாற்றி, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.ஆனால் மற்ற அதிருப்தி எம்எல்ஏக்களோ, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, எங்களை கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது.கூட்டத்தில் பங்கேற்குமாறு எங்களை கட்டாயப்படுத்தவும் முடியாது என்று கூறி, இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இதனால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழும் வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளது. கடைசி நேரத்தில் ஏதேனும் அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டுமே அரசு தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு ஒரளவு உள்ளது. அந்த வாய்ப்பும் சபாநாயகர் ரமேஷ்குமார் எடுக்கப் போகும் அதிரடி முடிவுகளால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் சபாநாயகரின் நடவடிக்கைகளை அனைவரும் உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவும் நிலையில், சட்டப்பேரவை வளாகம் முன் போலீசார் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளனர்.

'நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு' குமாரசாமி அரசின் கதி என்னவாகும்?

You'r reading நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா..?- கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை