பள்ளிகளில் வருகைப்பதிவு கருவிகளில் இந்தி திணிப்பு வைகோ கடும் கண்டனம்

vaiko condemns edappadi government for the inclusion of hindi in Biometric machines in government schools

by எஸ். எம். கணபதி, Jul 19, 2019, 11:26 AM IST

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் கருவிகளில்(பயோ மெட்ரிக்) இந்தியால் எழுதப்பட்டுள்ளதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தினமும் ஏதோ ஒரு வகையில் இந்தி திணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டுபிடித்து, மத்திய அரசைக் கண்டித்து குரல் எழுப்புகின்றன. இந்த வகையில் தற்போது தமிழக அரசின் பள்ளிகளிலேயே வருகைப் பதிவு கருவிகளில் இந்தியால் எழுதப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணை போய்க்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கு கடந்த ஜூன் மாதம் முதல் ‘பயோ மெட்ரிக்’ ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவேடு கருவியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பெயர் விபரங்கள் பதிவாகும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. நேற்று வருகைப் பதிவை உறுதி செய்யச் சென்ற ஆசிரியர்களும், பணியாளர்களும் ‘பயோ மெட்ரிக்’ கருவிகளில் தமிழ் நீக்கப்பட்டு, இந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவேடு கருவியில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தியைப் புகுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? திட்டமிட்டு இந்தி மொழியை வலிந்து திணிக்கின்ற திட்டத்திற்கு தமிழக அரசின் கல்வித்துறை அனுமதி கொடுத்தது கடும் கண்டனத்துக்கு உரியது.

சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முத்திரை, முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னையில் இயங்கி வருவது செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனமா? இந்தி மொழி ஆய்வு நிறுவனமா? செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

மத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைப் புகுத்த முனைந்திருக்கிறது. ரயில்வே துறை, அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தகவல் தொடர்பில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டது. இவை எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி வெறிப்போக்கைக் காட்டுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அ.தி.மு.க அரசும் இந்தியைப் புகுத்துவது மன்னிக்க முடியாதது.

தமிழக அரசின் புதிய பேருந்துகளில் இந்திச் சொற்றொடர்கள், பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் இந்தி என்று தமிழ்நாட்டை ‘இந்தி மயம்’ ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கின்றேன்.

தமிழக அரசு உடனடியாக பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளில் இந்தியை நீக்கிவிட்டு, தமிழ் மொழியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

தேசத்துரோக வழக்கு ; வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு

You'r reading பள்ளிகளில் வருகைப்பதிவு கருவிகளில் இந்தி திணிப்பு வைகோ கடும் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை