குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Jul 19, 2019, 11:19 AM IST

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட்டது. பல்வேறு ஆட்சேபணைகளையும் முன்வைத்தது. அதே சமயம், குல்பூஷன் ஜாதவுக்காக இந்தியா வாதாடியது.

சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி யூசுப் தலைமையிலான அமர்வில் 15 நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த அமர்வு, ஜாதவ் வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் ஏக மனதாக தீர்மானித்துள்ளன.

குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விசாரணை செய்த அமர்வில் 15 பேர் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கு ஆதரவாகவும், ஜிலானி என்ற ஒரு நீதிபதி மட்டும் அதற்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

சர்வதேச தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவ 36ல் குறிப்பிட்டுள்ளபடி ஜாதவ் கைது செய்யப்பட்டவுடன் தாமதமின்றி அவருக்கான உரிமைகளை தெரிவிக்காததன் மூலம் தனக்குள்ள கடமையை ஆற்ற பாகிஸ்தான் தவறி விட்டது என்று சர்வதேச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஜாதவ் கைது செய்யப்பட்ட போது 22 நாட்களுக்கு பின்புதான் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தகவல் கூறியிருந்தது. குல்பூஷன் ஜாதவை கைது செய்தது குறித்து தாமதமின்றி இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்காததன் மூலம் ஜாதவுக்கு உதவி வழங்குவதற்கும், அவரை அணுகுவதற்கும் இந்தியாவுக்கு உள்ள உரிமையை பாகிஸ்தான் பறித்துவிட்டதாகவும் இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள், குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சட்டங்களின்படி, குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகளை வகுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

ஏற்கனவே, 2017ஆம் ஆண்டு டிசம்பரில், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவியும், தாயாரும் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தனி விமானத்தில் தப்ப முயன்ற காங்.எம்எல்ஏ... மோசடி வழக்கில் கைது செய்த போலீஸ் ..! பெங்களூருவில் பரபரப்பு


Leave a reply