குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. ஆனால், ஜாதவுக்கு வழக்கறிஞர் வைத்து தனது தரப்பில் வாதாடுவதற்கு கூட சரியான வாய்ப்புகள் தரப்படவில்லை. இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட்டது. பல்வேறு ஆட்சேபணைகளையும் முன்வைத்தது. அதே சமயம், குல்பூஷன் ஜாதவுக்காக இந்தியா வாதாடியது.
சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி யூசுப் தலைமையிலான அமர்வில் 15 நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த அமர்வு, ஜாதவ் வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் ஏக மனதாக தீர்மானித்துள்ளன். தூதரக உறவுகள் தொடர்பான 1967-ம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தின்கீழ் இந்த முடிவுக்கு வந்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த ஆட்சேபனைகளை இந்த நீதிமன்றம் நிராகரித்தது.
குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீராய்வுக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்தவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விசாரணை செய்த அமர்வில் 15 பேர் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கு ஆதரவாகவும், ஜிலானி என்ற ஒரு நீதிபதி மட்டும் அதற்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர்.
சர்வதேச தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவ 36ல் குறிப்பிட்டுள்ளபடி ஜாதவ் கைது செய்யப்பட்டவுடன் தாமதமின்றி அவருக்கான உரிமைகளை தெரிவிக்காததன் மூலம் தனக்குள்ள கடமையை ஆற்ற பாகிஸ்தான் தவறி விட்டது என்று சர்வதேச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பின் இந்த அம்சத்துக்கும் அமர்வின் தலைவர் யூசூப் உள்ளிட்ட 15 பேர் ஆதரவாகவும், தாற்காலிக நீதிபதி ஜிலானி ஒருவர் மட்டும் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.
ஜாதவ் கைது செய்யப்பட்ட போது 22 நாட்களுக்கு பின்புதான் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தகவல் கூறியிருந்தது. குல்பூஷன் ஜாதவை கைது செய்தது குறித்து தாமதமின்றி இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்காததன் மூலம் ஜாதவுக்கு உதவி வழங்குவதற்கும், அவரை அணுகுவதற்கும் இந்தியாவுக்கு உள்ள உரிமையை பாகிஸ்தான் பறித்துவிட்டதாகவும் இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அதை சர்வதேச நாடுகளின் பார்வைக்கு உட்பட்டு முறையாக செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக சர்வதேச நாடுகள் பார்க்கின்றன. இந்த தீர்ப்பை பிரதமர் மோடி மற்றும் இந்திய தலைவர்கள் அனைவரும் வரவேற்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பத்திரிகைகளோ சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது போல் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை என்பது போலவும், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யாமல் திருப்பி அனுப்பியதே பெரிய வெற்றி போலவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுவே சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது போல் வெளிக்காட்டுகிறது.