பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆட்சியில் இருந்த போது, அவரது சகோதரர் ஆனந்த்குமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக கூறி, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆனந்த்குமாரின் சொத்துக்கள் குறித்து வருமானவரித் துறையின் பினாமி சொத்து ஒழிப்பு பிரிவு விசாரிக்கத் தொடங்கியது. கடந்த 2016ம் ஆண்டில் பினாமி சொத்துக்கள் ஒழிப்புச் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது.
இதன்படி, வருமானவரித் துறையில் அமைக்கப்பட்ட பினாமி சொத்து ஒழிப்பு பிரிவு, ஆனந்த்குமார் மற்றும் அவரது மனைவி விசித்தர் லதா ஆகியோருக்கு சொந்தமான டெல்லி நொய்டாவில் உள்ள 7 ஏக்கர் நிலத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளது. 28,328 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய். இந்த சொத்தை முடக்கி வைத்து, இது பற்றி பினாமி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை வருமானவரித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பினாமி சொத்து ஒழிப்பு சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறைத்தண்டனையும், சொத்து மதிப்பில் 25 சதவீத அபராதமும் விதிக்கப்படும். ஆனந்த்குமாரை சமீபத்தில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவராக மாயாவதி நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.