மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியதை அடுத்து, மாயாவதி கடும் கோபம் கொண்டுள்ளார். மத்திய அரசின் துறைகள், பாஜக தலைவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சகோதரர் ஆனந்த்குமார் மற்றும் அவரது மனைவி விசித்தர்லதா ஆகியோருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தை பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித் துறையினர், முடக்கியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘எனது குடும்பத்தை குறிவைத்து மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது போன்ற மிரட்டல்களுக்கு நான் பணிய மாட்டேன். நாடாளுமன்றத் தேர்தலில் 2 ஆயிரம் கோடியை செலவிட்டு வாக்குகளை பாஜக கைப்பற்றியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு ஜாதி அரசியலை பாஜக கையில் எடுத்திருக்கிறது. உ.பி.யில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது.
மத்திய அரசின் சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்ட ஏஜென்சிகள், பாஜக தலைவர்களின் சொத்துக்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் அரசியலுக்கு வரும் போது எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள். இப்போது எவ்வளவு சேர்த்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடக் கூடாது’’ என்று கூறியுள்ளார்.