பா.ஜ.க.வின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது, நாடு முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறும் சதித் திட்டம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. அப்படியிருந்தும் பகுஜன் சமாஜ் 10, சமாஜ்வாடி 5 இடங்களில் மட்டுமே வென்றன. காங்கிரஸ் சோனியாவின் ரேபரேலியில் மட்டுமே வென்றது. மீதி 64 இடங்களையும் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெற்றது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தேர்தலில் பா.ஜ.க.வும், தேர்தல் கமிஷனும் சேர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பெரிய முறைகேடு செய்துள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக விவாதிப்பதற்காக தனது கட்சியின் ஆலோசனை கூட்டத்தை லக்னோவில் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் புதிய முழக்கம், ஒரு பெரிய சதித் திட்டம். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்தி, வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறலாம் என்பதுதான் அந்த சதித் திட்டம். இதன்மூலம், நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவில்லை. மாறாக, வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து பா.ஜ.க. வென்றுள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்த வேண்டும்.
பெரும்பான்மையான மக்கள், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்றால், ஏன் அந்த கட்சியினர் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரப் பயப்படுகிறார்கள்? தேர்தல் கமிஷன் பிரதமரிடம் தலைவணங்கிச் செல்கிறது. அரசியல் சாசன அமைப்புகள் சட்டப்படி செயல்பட வேண்டும்.
இவ்வாறு மாயாவதி பேசினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர், கட்சியின் மக்களவை தலைவராக டேனிஷ் அலி நியமிக்கப்பட்டார். மேலும், மாயாவதியின் சகோதரர் ஆனந்தகுமார், கட்சியின் துணைத் தலைவராகவும், மருமகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.