இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? என்பது போட்டா போட்டியாகி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், 4 - வது அணி யார்? என்பதில் இங்கிலாந்துடன் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கு நிற்கின்றன.
கிரிக்கெட்டின் சொர்க்க பூமி என்றழைக்கப்படும் இங்கிலாந்துக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கும் எப்போதுமே ராசி கிடையாது. ஏனெனில் இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதாக சரித்திரம் கிடையாது.லீக் போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தும் அந்த அணி, இறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டியுடன் வெளியேறும் சோகம் தொடர்கிறது .1979, 1987, 1992 உலகக் கோப்பை போட்டிகளில் பைனலுக்கு முன்னேறினாலும் வெற்றியை சுவைக்க வில்லை.
முதல் 3 உலகக் கோப்பை போட்டிகளை தனது மண்ணில் நடத்திய இங்கிலாந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 2019 உலகக்கோப்பை தொடரை நடத்துகிறது. இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பே சிக்கலாகியுள்ளது எனலாம். இதற்கு காரணம் கடைசியாக விளையாடிய போட்டியில் இலங்கை அணியிடம் இங்கிலாந்து தோற்றது தான். இதனால் இப்போது 4 - வது இடத்துக்கு இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இங்கிலாந்து முட்டி மோத வேண்டியுள்ளது.
இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகள் படி புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 6 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்தான நிலையில் மொத்தம் 11 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 10 புள்ளிகளும் 2-வது இடத்திலும், 5 போட்டிகளில் 4 ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து என்ற நிலையில் 9 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் 4-ல் வென்று 8 புள்ளிகளுடன் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
ஆனால் இங்கிலாந்துக்கு சிக்கலே இனிமேல் உள்ள போட்டிகளில் தான் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகள் பலம் மிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுடன் மோத வேண்டும். இதில் குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது வென்றால் மட்டுமே இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும். இல்லையேல் 6 புள்ளிகளுடன் உள்ள இலங்கை, தலா 5 புள்ளிகள் பெற்றுள்ள பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தாங்கள் மோத உள்ள எஞ்சிய 3 போட்டிகளில் விவேகம் காட்டி வெற்றி பெற்றால் இங்கிலாந்தின் நிலைமை அதோகதிதான்.
இதனால் இந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் இனி நடைபெற உள்ள போட்டிகளில் கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு ஒவ்வொரு அணியும் பலப்பரீட்சை நடத்தும் என்பதால் இந்தத் தொடர் விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது என்றே கூறலாம். தற்போதைய நிலவரப்படி ஆப்கனும், தெ.ஆப்பிரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டன. 3 புள்ளிகளுடன் உள்ள வெ.இண்டீஸ் அணிக்குக் கூட கொஞ்சமேனும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்து நடைபெற உள்ள போட்டிகளில் அனல் பறக்கப் போவது நிச்சயம்.