உலகக் கோப்பை கிரிக்கெட் - இலங்கையிடம் வீழ்ந்தது ஆப்கன் அணி

World Cup cricket, Sri Lanka beat Afghanistan by 34 runs:

by Nagaraj, Jun 5, 2019, 09:03 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் எளிய இலக்கை துரத்த முடியாமல் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றது. இதனால் உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி .

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியின் 7-வது ஆட்டத்தில் இலங்கையுடன் மோதியது ஆப்கன் அணி . கார்டிப் நகரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணித் தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் திமுத் கருணரத்னேவும் குஸால் பெரைராவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். திமுத் கருணரத்னே 30 ரன்கள் எடுத்த நிலையில், முகமது நபி பந்துவீச்சில் அவுட்டானார்.

இதைத் தொடர்ந்து வந்த லஹிருவை 25 ரன்களில் போல்டாக்கினார் முகமது நபி. ஒருமுனையில் குஸால் பெரைரா நிலையாக ஆடி வந்த நிலையில், மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்ததால், இலங்கை அணி நெருக்கடிக்கு ஆளானது.

குஸால் மெண்டிஸ் 2, மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 0, தனஞ்செய டி சில்வா 0, திஸாரா பெரைரா 2, இஸுரு உடானா 10 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். 8 பவுண்டரியுடன் 81 பந்துகளில் 78 ரன்களை விளாசிய குஸால் பெரைரா, ரஷித் கான் பந்துவீச்சில் முகமது ஷஸாதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இலங்கை அணி 33 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

பின்னர் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. ஆப்கன் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை.
ஆப்கன் தரப்பில் முகமது நபி அபாரமாக பந்துவீசி 30 ரன்களை மட்டுமே தந்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி ஓவர்கள் எண்ணிக்கை 41 ஆக குறைக்கப்பட்ட நிலையில் 187 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆப்கன் தரப்பில் முகமது ஷஸாத், ஹஸ்ரத்துல்லா ஸஸாய் களமிறங்கினர்.

இருவரும் அடித்து ஆட முயன்ற நிலையில், ஷஸாத் 7 ரன்களிலும், அடுத்து வந்த ரஹ்மத் ஷா 2 ரன்களிலும் அவுட்டாகி நடையைக் கட்டினார். சிறப்பாக ஆடிய ஹஸ்ரத்துல்லாவும் 30 ரன்களில் நுவன் பிரதீப் பந்துவீச்சில் அவுட்டானார். இதனால்
15-வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்களை எடுத்து தத்தளித்தது ஆப்கானிஸ்தான்.

பின்னர் வந்த ஹஸ்மத்துல்லா(4), நபி (11), கேப்டன் குல்பதீன் நைப் (23), . ரஷித் கான் (2), தெளலத் ஸட்ரன் (6), ஹமித் ஹாசன் (6) என சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். நஜிபுல்லா ஸட்ரன் மட்டுமே நிலைத்து ஆடி 43 ரன்களை சேர்த்து அவுட்டாக, 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆப்கானிஸ்தான்.

மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட போதிலும், எளிய இலக்கான 187 ரன்களை எட்ட முடியாமல், இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சால், 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆப்கன் அணி.இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய நுவன் பிரதீப் 4 விக்கெட்களையும், மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கைக்கு இந்த வெற்றி உற்சாகத்தை அளித்துள்ளது.

You'r reading உலகக் கோப்பை கிரிக்கெட் - இலங்கையிடம் வீழ்ந்தது ஆப்கன் அணி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை