கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நூறு பேர் இரவு முழுவதும் தங்கினர். மசாலா தோசை, தயிர் சாதம் என்று கிடைத்ததை சாப்பிட்டு விட்டு, தரையிலேயே படுத்து உறங்கினர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் 13 மாத கால ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளையும் சேர்ந்த 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி இழந்து, ஆட்சியும் பறிபோகும் சூழல் உறுதியாகிவிட்டது. இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்க நேற்று சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வந்தார்.
ஆனால் வாக்கெடுப்பை நடத்தாமல், சட்டப்பேரவையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆளும் தரப்பில் பெரும் சந்தேகங்களை எழுப்பினர். கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமய்யா பிரச்னை எழுப்பினார். தொடர்ந்து, ‘‘காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீ மந்த் படேலை பாஜகவினர் கடத்திச் சென்று விட்டனர். அதற்கான ஆதாரம் உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை மீட்டு சபைக்கு அழைத்து வர வேண்டும்’’ என அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றொரு பிரச்னையை எழுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை கால தாமதம் செய்தார்.
இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, பாஜக தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி, ஆளுநரிடம் முறையிட்டனர். ஆளுநரும் இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். ஆனாலும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள், கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான பிரச்னையை தொடர்ந்து எழுப்ப மீண்டும் அமளி ஏற்படவே, சட்டப் பேரவையை இன்று காலை 11 மணி வரைக்கும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதை எதிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தர்ணா நடத்தியதுடன் இரவு முழுவதும் அங்கேயே படுத்துறங்கினர். அவர்களை வெளியே செல்ல பாஜக தலைமை அனுமதிக்கவில்லை. மேலும் யாருடனும் செல்போனில் பேசவும் அனுமதிக்கவில்லை. இதனால், அவர்களால் வெளியில் இருந்து உணவு, உடை பெற முடியாமல் தவித்தனர்.
ஆனாலும், சட்டப்பேரவை கேண்டீனில் அவர்களுக்காக மசாலா தோசையும், தயிர்ச் சாதமும் மட்டும் ரெடி பண்ணி ெகாடுத்தனர்.
ஆனால், சில எம்.எல்.ஏ.க்கள் எப்படியோ வெளியில் இருந்து சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொண்டு வரச் செய்து விட்டனர். அதே போல், சிலர் மட்டும் பக்கத்து கடைகளில் இருந்து மெத்தை தலையணை கொண்டு வரவைத்து படுத்தனர். பலர் சட்டப்பேரவை வளாகத்திற்குள் தரையிலேயே படுத்து உறங்கினர். அதற்கு முந்தைய நாள் வரை அவர்கள் பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கட்டில், மெத்தை என்று சகல வசதிகளுடன் தங்கியிருந்தனர். ஒரே நாளில் அவர்களின் நிலைமை தலைகீழாக மாறியது. காசு பணம் இருந்தாலும் தரையில் படுத்து தூங்கும் நிலை ஏற்பட்டதுதான் பரிதாபம். எப்படியோ, சட்டப்பேரவை வளாகம் நேற்றிரவு கெஸ்ட் ஹவுசாக மாறியிருந்தது.