குமாரசாமி அரசு மேலும் 2 நாள் தப்பித்தது வாக்கெடுப்பு 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Karnataka political crisis, trust vote delayed for another 2 days as speaker adjourned assembly till Monday

by Nagaraj, Jul 19, 2019, 22:51 PM IST

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்தும் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் விவாதம் இரவு வரை நீடித்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல், திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் குமாரசாமி அரசு மேலும் 2 நாட்களுக்கு தப்பிப் பிழைத்துள்ளது.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் நிலைமை ஊசலாடுகிறது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி கெத்தாக அறிவித்தார். தொடர்ந்து வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கப்பட்டு நேற்றே சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் குமாரசாமி.

ஆனால் பேரவையில், தமக்கு ஆதரவாக மெஜாரிட்டி உறுப்பினர்கள் இல்லை என்று தெரிந்து கொண்ட முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு தயாராகாமல், விவாதம் என்ற பெயரில் நேரம் கடத்தினார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி, அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியுமா? இல்லையா? என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா, முக்கிய பிரச்சனையை எழுப்பினார். இதனால் ஆவேசமடைந்த பாஜகவினர் அமளியில் ஈடுபடநேற்று 3 முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் பாஜகவினர் ஆளுநடரிடம் முறையிட, நேற்று இரவுக்குள் வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநரும் உத்தரவிட்டார். ஆனால் நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் பேரவை கூடிய சில நிமிடங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படாமலே சபையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதனால் பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள், இரவு முழுவதும் அங்கேயே தூங்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்தார். ஆனால் இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடனே, ஆளுநரின் கெடுவை நிராகரித்த சபாநாயகர், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார். மேலும் வாக்கெடுப்புக்கு முன் நம்பிக்கை தீர்மானத்தின் மீது உரிய விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறி, முதல்வர் குமாரசாமியை பேச அனுமதித்தார். பாஜக தரப்பிலோ, விவாதத்தில் பங்கேற்க மாட்டோம். உடனடியாக வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினாலும், ஆளும் தரப்பில் பலரும் விவாதத்தில் பங்கேற்க, ஆளுநர் விதித்த 1.30 மணி கடந்தது .தொடர்ந்து 3 மணி வரை உணவு இடைவேளைக்காக சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

ஆளுநர் விதித்த கெடு முடிந்தும் வாக்கெடுப்பு நடத்தப்படாததால் பாஜக தரப்பில் மீண்டும் ஆளுநரிடம் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றைக்குள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஆளுநர் மீண்டும் ஒரு கெடு விதித்தார். மேலும் வாக்கெடுப்பை தாமதப்படுத்துவது குதிரை பேரத்துக்கு வழி வகுத்துவிடும் என்றும் ஆளுநர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே முதல்வர் குமாரசாமி தரப்பிலும், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தரப்பிலும் உச்சதீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. கொறடா உத்தரவு தொடர்பான தீர்ப்பில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தக்கோரி முறையீடு செய்யப்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களின் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளது.

இது அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது. எனவே 15 எம்எல்ஏக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் கூடாது என்ற உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் தேவை என்று தினேஷ் குண்டு ராவ் மனுவில் கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு செய்திருப்பதை காரணம் காட்டி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்குமாறு ஆளும் தரப்பில் வலியுறுத்தினர்.

ஆனால், சபாநாயகரோ இன்றே வாக்கெடுப்பை நடத்தப் போகிறேன். விவாதத்தை சீக்கிரம் முடித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என திடீரென அறிவிக்க ஆளும் கட்சித் தரப்பில் பரிதவித்துப் போய் விட்டனர். வாக்கெடுப்பை எப்படியாவது திங்கட்கிழமை வரை தள்ளி வைத்துவிட வேண்டும் என முடிவு செய்து, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பலரும் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இதனால் இரவு 8.30 மணி வரை விவாதம் நீடிக்க, திடீரென திங்கட்கிழமை வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் கட்டாயம் வாக்கெடுப்பு நடைபெறும் எனக் கூறி சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.

இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு மேலும் 2 நாட்களுக்கு அவகாசம் கிடைத்துள்ளது. இந்த இரு நாட்களில் கர்நாடக அரசியலில் இன்னும் என்னென்ன நாடகங்களும், கூத்துகளும் அரங்கேறப்போகிறதோ? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading குமாரசாமி அரசு மேலும் 2 நாள் தப்பித்தது வாக்கெடுப்பு 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை