காலியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப்போவதாக புனேயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். தம்மிடம் தலைவர் பதவியைக் கொடுத்தால் கட்சியை தலை நிமிரச் செய்வேன் என்றும் 28 வயதான அந்த இளைஞர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டு போயுள்ளது காங்கிரஸ்.தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துவிட்டார். ராஜினாமா முடிவை வாபஸ் பெற மறுத்த ராகுல், வேறு ஒரு தலைவரை தேர்வு செய்யுங்கள் என்றும் கண்டிப்புடன் கூறிவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு பஞ்சமாகி விட்டதுபோலும். நாடு முழுமைக்கும் நன்கு அறிமுகமான ஜனரஞ்சகமான பிரபலம் யாரையும் சுட்டிக் காட்ட முடியாததால் 2 மாதங்களுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாத கட்சியாக தள்ளாட்டம் போட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், தம்மால் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தலைநிமிரச் செய்ய முடியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த புனே இளைஞரின் பெயர் கஜானந்த் ஹோசாலே.28 வயதான இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, புனேயில் உள்ள பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றில் மேலாளர் பதவியில் உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவி காலியாக உள்ளதால், அக்கட்சி மேலும் கரைந்து வருகிறது. இதனால் இளைஞரான தம்மை காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தினால், கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சி, கட்சியை தலை நிமிரச் செய்ய முடியும். கிராமப்புற இளைஞனான தாம், இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை.
என்றாலும், தாம் பணியாற்றும் நிறுவனத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள அனுபவத்தின் மூலம் காங்கிரசையும் கரை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் கட்சியின் செல்வாக்கை நிமிரச் செய்வதற்கான திட்டங்களும் தம்மிடம் ஏராளமாக உள்ளதாக தெரிவித்துள்ள ஹோசாலே, அதற்காக புளூ பிரின்ட் தயாராக உள்ளதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் இன்றே காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவதற்கான பணிகளை ஆரம்பித்து விட்டேன். நாளை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரானேஷ் பாக்மியைச் சந்தித்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் கொடுக்கப் போவதாகவும் கஜானந்த் ஹோசாலே தெரிவித்துள்ளார். நூற்றாண்டைக் கடந்து விட்ட காங்கிரஸ் கட்சி, பல மாபெரும் தலைவர்களால் பீடு போட்டு வந்தது ஒரு காலம். தலைவர் பதவிக்கு பிரபலங்களிடையே போட்டா போட்டியாகி, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறும் உண்டு. இன்றோ இளைஞர் ஒருவர், தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போகிறேன் என்று கூறுமளவுக்கு அக்கட்சியில் தலைவர்களுக்கு பஞ்சமாகிப் போய்விட்டது என்பது தான் இன்றைய நிலை.
இந்த புனே இளைஞர் கஜானந்த் ஹோசாலேவும் உண்மையில் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க போகிறாரா? அல்லது காங்கிரசை கிண்டலடிப்பதற்காக கூறியுள்ளாரா? என்பது நாளை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவரை சந்திப்பதில் தெரிந்துவிடும்.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு - ராகுல் பிடிவாதம் நீடிக்கிறது