ராஜ்யசபாவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நுழையவுள்ள வைகோ, தன்னை வசைபாடிய சுப்பிரமணிய சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்பு வை.கோபால்சாமியாக திமுகவில் இருந்த போது முதன் முதலாக நாடாளுமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். 1978ம் ஆண்டில் ராஜ்யசபா உறுப்பினரான அவர் தொடர்ந்து 1984, 1990 ஆகிய ஆண்டுகளிலும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் அந்த பதவி முடிந்தது. தற்போது மீண்டும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராஜ்யசபா உறுப்பினராக செல்கிறார்.
இதற்கிடையே, அவர் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார். தனது பெயரை வைகோ என்று மாற்றிக் கொண்டார். 1998ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகாசி தொகுதியி்ல் போட்டியிட்டு எம்.பி.யானார். ஒரே ஆண்டில் 1999ல் நடந்த தேர்தலிலும் அதே தொகுதியில் வென்றார்.
இந்நிலையில், தற்போது ராஜ்யசபாவுக்கு வைகோ தேர்வானதும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அவரை தாக்கி ஒரு ட்விட் போட்டார். அதில், ‘‘வைகோ கிறிஸ்தவர். விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பின்பற்றுபவர். கிறிஸ்தவ மிஷனரி திட்டத்துடன் அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார். அவரை எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்கக் கூடாது’’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பின்னர், வைகோ சென்னையில் பேட்டியளித்த போது, ‘‘நான் எந்த மதத்தையும் சாராதவன்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், வைகோ, நாடாளுமன்றத்திற்கு சென்ற போது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அந்த வளாகத்தில் இருக்கும் அண்ணா சிலைக்கு சென்று கீழே விழுந்து வணங்கினார். அதன்பின், முரசொலி மாறன், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் சிலைகளை வணங்கி மரியாதை செய்தார்.
இதன் பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் அவர் திடீரென சுப்பிரமணிய சுவாமியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது அவரிடம் கைகுலுக்கி, நலம் விசாரித்தார். வைகோ மீண்டும் எம்.பி ஆகியதற்கு சுவாமி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். இந்த சந்திப்பு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.