பணமே பிரதானமாகி விட்டது அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல - கர்நாடக சபாநாயகர் விளாசல்

Money minded Politicians are not human, Karnataka speaker Ramesh Kumar criticism

by Nagaraj, Jul 24, 2019, 12:26 PM IST

அனைத்துக் கட்சிகளும் அரசியல் செய்ய பணத்தையே பிரதானமாக நினைக்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக அரசியலில், குமாரசாமி அரசுக்கு எதிராக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்த குழப்பங்கள், நேற்று ஆட்சிக் கவிழ்ப்பில் முடிந்துள்ளது. இந்த நாட்களில் ஆட்சியைக் காப்பாற்ற குமாரசாமி தரப்பும், கவிழ்க்க அதிருப்தி எம்எல்ஏக்களை இழுத்து வைத்துக் கொண்டு பாஜகவும் நடத்திய நாடகங்களை நாடே உற்றுப் பார்த்தது எனலாம். பணம், பதவி, அதிகாரத்திற்காக கர்நாடக அரசியல்வாதிகள் நடத்திய இந்த நாடகத்தில் அதிரடித் திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விதவிதமான காட்சிகள் அரங்கேறின.

இந்த கர்நாடக அரசியல் கூத்தில் வசமாக மாட்டிக் கொண்டாலும், திறம்பட தமது பணியை செவ்வனே செய்த மாமனிதர் ஒருவர் என்றால் அவர் கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் தான் என்றால் மிகையாகாது. அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு, ஆளும் கட்சியின் நெருக்கடி, எதிர்க்கட்சியான பாஜகவின் விமர்சனம் என அனைத்து பிரச்னைகளையும், நிதானம் தவறாமல் ஒரு இரும்பு மனிதர் போல் செயல்பட்டார் ரமேஷ்குமார் .

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக 4 நாட்களாக சட்டப்பேரவையை அவர் நடத்திய விதமே அலாதியானது. எவ்வித பதற்றமுமின்றி அமைதியான குரலில், அதே வேளையில் கண்டிப்புடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை அவர் கையாண்ட விதம் நடுநிலையாளர்கள் பலரை கவர்ந்து விட்டது எனலாம்.

தம் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போது கூட, உங்களைப் போல அரசியலில் கோடிகளை சம்பாரித்ததில்லை. எல்லாமே அரசியல் சாசனப்படி தான் நடக்கும், நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்று சுளீரென பதிலடி கொடுத்தார். முதல்வர் குமாரசாமி, இன்னும் விவாதிக்க வேண்டும் என அவகாசம் கேட்டதற்கெல்லாம் சரி, சரியென அனுமதி கொடுத்த சபாநாயகர், ஒரு கட்டத்தில், இதற்கு மேல் வாய்ப்பு கொடுத்தால் என் மதிப்பு, மரியாதை போய் விடும் என கண்டிப்பு காட்டினார். அத்துடன் வாக்கெடுப்புக்கு இறுதிக்கெடு விதித்து, நியாயமான முறையில் வாக்கெடுப்பை நடத்தி முடித்த விதம் அனைவரின் பாராட்டைப் பெற்றுவிட்டது எனலாம்.

இப்படி ஆட்சி கவிழும் சிக்கலான சிக்கலுக்கு பாதி தீர்வு கண்டாகி விட்டாலும், இன்னும் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம், அடுத்து புதிய அரசு அமையும் போது ஏற்பட உள்ள புதிய சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டிய கடமை சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு உள்ளது. இருந்தாலும் கடந்த 2 வாரங்களாக கர்நாடக அரசியலில் நடந்த பல்வேறு கூத்துகளால் சபாநாயகர் ரமேஷ் குமார் மனம் நொந்து விட்டார் போலும் என்றே தெரிகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ரமேஷ்குமார்,இன்னும் 2 நாட்களில் சபாநாயகரின் பலத்தை அனைவரும் அறிந்துகொள்வார்கள் எனக் கூறியதுடன், அனைத்துக்கட்சிகளுமே பணத்தை பிரதானமாக வைத்து அரசியல் செய்கின்றன. இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல என்று சுருக்கமாக கடுமையான வார்த்தைகளால் விளாசியிருப்பது கர்நாடக அரசியலை அப்பட்டமாக தோலுரித்து காட்டுவதாக அமைந்துள்ளது.

You'r reading பணமே பிரதானமாகி விட்டது அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல - கர்நாடக சபாநாயகர் விளாசல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை