தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும் பதவி வகித்து தமிழகத்தின் முதுபெரும் தலைவராக திகழ்ந்த கருணாநிதி, 94 வயதில் கடந்தாண்டு ஆகஸ்டு 7-ந் தேதி மறைந்தார். கருணாநிதியின் முதலாவது ஆண்டு நினைவு நாளில், சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் அவருடைய முழு உருவச் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
திமுக சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த விழாவில் பங்கேற்கிறார்.
தற்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்று சிலையை திறந்து வைத்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் பலரும் பங்கேற்ற இந்த விழாவில் தான், ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால் தற்போது நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவுக்கு சோனியா, ராகுல் ஆகியோருக்கு அழைப்பு விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.