கர்நாடக சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக பதவி பறிக்கப்பட்ட 17 எம்எல்ஏக்களும் அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது அம்மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
குமாரசாமி அரசு கவிழ்ந்தவுடனே சபாநாயகர் ரமேஷ்குமார், விறுவிறுவென அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்தார். முதலில், காங்கிரசில் அதிருப்தி எம்எல்ஏக்களை அணிதிரட்டக் காரணமாக இருந்த ரமேஷ் ஜர்கிகோலி, மகேஷ் குமாட்டாஹாலி ஆகிய இருவருடன், சுயேட்சை எம்எல்ஏவான சங்கர் ஆகிய 3 பேரையும் தகுதி நீக்கம் செய்தார்.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கு கோரும் நிலையில், நேற்று அதிரடியாக மேலும் 14 எம்எல்ஏக்களின் பதவியைப் பறித்து சபாநாயகர் அதிரடி காட்டினார். இதில் ராஜினாமா கடிதம் கொடுக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீ மந்த் படேலின் பதவியும் கூட பறிக்கப்பட்டது. இவர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முதல் நாள் பெங்களூருவில் இருந்து திடீரென மாயமானார். மறுநாள் மும்பையில மருத்துவமனை ஒன்றில் நெஞ்சு வலிக்காக சிகிச்சை எடுப்பதாகக் கூறி நாடகமாடியவர். இவருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க கொறடா உத்தரவு பிறப்பித்தும், புறக்கணித்ததாகக் கூறி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரின் நடவடிக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக, பதவி பறிப்புக்கு ஆளான 17 எம்எல்ஏக்களும் தெரிவித்துள்ளனர். தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும் முன், தங்களுக்கு 7 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் 3 நாட்களில் சபாநாயகர் திடீரென நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் சபாநாயகரின் இந்த நடவடிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 17 பேரும் முறையிட உள்ளதாக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான ரமேஷ் ஜர்கி கோலி தெரிவித்துள்ளார்.
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்; நம்பிக்கை வாக்கெடுப்பி்ல் எடியூரப்பா வெற்றி உறுதி