உ.பி.யில் பாஜக எம்எல்ஏ ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் மீது டிரக் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்றம் முன் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உ.பி. மாநிலம் உன்னாவ்வில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது புகார் எழுந்தது. புகாரை போலீசார் விசாரிக்க மறுக்க, அச்சிறுமி, தனது தந்தையுடன் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாந் வீட்டின் முன் போராட்டம் நடத்தினார். அப்போது தீக்குளிக்கவும் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது பாஜக எம்எல்ஏ வின் ஆட்கள் தாக்கியதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை காயமடைந்தார். காயமடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென இறந்து விட்டார்.
இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கும் உ.பி.அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தற்போது பாஜக எம்எல்ஏ சிறையில் உள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் தனது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலி அருகே கார் மீது டிரக் ஒன்று மோதியதில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்தனர். வழக்கறிஞரும், பெண்ணும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கார் மீது டிரக் மோதிய சம்பவம் விபத்து அல்ல.சம்பந்தப்பட்ட பெண்ணை கொலை செய்ய பாஜக எம்எல்ஏ வின் ஆட்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு பாதுகாப்புக்கு போலீசார் உடன் செல்வது வழக்கம். ஆனால் விபத்தன்று பெண்ணுடன் பாதுகாப்புக்கு யாரும் செல்லவில்லை. மேலும் கார் மீது மோதிய டிரக்கிலும் நம்பர் பிளேட் இல்லாததும், இந்த விபத்து திட்டமிட்டே நடத்தப்பட்டது என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.
டிரக் ஏற்றி கொல்ல நடந்த இந்தச் சம்பவம், நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனக் குரல் எழுப்பியதுடன், சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக் கோரி குரல் எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவினர் பாலியல் கொடுமையில் ஈடுபட்டால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது போல் உள்ளது என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்எலஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய சகோதரர் உட்பட 29 பேர் மீது உ.பி.போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் தயாராக உள்ளதாக உ.பி.மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றம் வாயிலில் காந்தி சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு நீதியும், உரிய பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். டிரக் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
அனிமேஷன் தியேட்டரில் தீ வைப்பு, 13 பேர் பலி; ஜப்பானில் பயங்கரம்