மங்களூருவில் திடீரென மாயமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியிருக்கிறது. கடன் தொல்லைகளை சமாளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வருமான வரித் துறை அதிகாரி கொடுமைப்படுத்தியதையும் எழுதியிருக்கிறார்.
‘கபே காபிடே’ என்ற பிரபலமான காபி நிறுவனத்தை கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா நடத்தி வந்தார். இவர் கர்நாடகா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவின் கணவர். பெங்களூருவில் இருந்து நேற்று காலை காரில் புறப்பட்டு சென்ற சித்தார்த்தா, மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் இறங்கிக் கொண்டு டிரைவரை அங்கேயே இருக்கச் சொன்னார். வாக்கிங் போய் விட்டு வருவதாக டிரைவரிடம் கூறி விட்டு சென்ற அவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
மங்களூருவில் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் நேற்றிரவு 8.30 மணிக்கு சென்றவர், இது வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். இரவில் இருந்தே சித்தார்த்தாவை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். அவரை யாரும் கடத்திச் சென்று விட்டார்களா என்றுதான் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டனர். ஆனால், அவர் ஆற்றுப் பாலத்தில் இறங்கியதால், ஒரு வேளை அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இந்நி்லையில், அவர் தனது காபிடே நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எழுதி வைத்த ஒரு கடிதம் சிக்கியிருக்கிறது. அதைப் பார்த்தால் அவர் நிச்சயம் தற்கொலைக்கு போயிருப்பார் என்று யூகிக்க முடிகிறது.
அந்த உருக்கமான கடிதத்தில் சித்தார்த்தா கூறியிருப்பதாவது:
கடந்த 37 ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ெகாடுத்திருக்கிறேன். மேலும் 20 ஆயிரம் பேருக்கு தொழில்நுட்பக் கம்பெனி மூலம் வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். நிறுவனத்தின் அதிக பங்குகளை வைத்திருக்கும் என்னால், கம்பெனியை லாபகரமாக இயக்க முடியவில்லை.
இவ்வளவு பெரிய நிறுவனத்தை லாபகரமாக இயக்குவதில் நான் தோற்று விட்டேன். உங்கள் அனைவரையும் கைவிட்டு விட்டு செல்வதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் நிறைய போராடி விட்டேன். நான் ஒரு நண்பரிடம் ஏராளமாக கடன் வாங்கி, கடந்்த 6 மாதத்தில் பாதிப் பங்குகளை மீட்டேன். ஆனாலும், என்னால் இந்த சூழ்நிலையில் இருந்து மீள முடியவில்லை.
வருமான வரித் துறையின் முந்தைய டைரக்டர் ஜெனரல், இரண்டு சமயங்களில் எங்கள் பங்குகளை முடக்கி வைத்து மிகவும் கொடுமைப்படுத்தினார். மைன்ட்ரீ டீலை பிளாக் செய்ததுடன், பங்குகளை மீட்கவும் முடியாமல் செய்து விட்டார்.
எனது தவறுகளுக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன். கம்பெனியின் அனைத்து பரிமாற்றங்களுக்கும் நானே காரணம். எனது கம்பெனி ஆடிட்டர்கள், நிர்வாகிகள் யாரையும் இதற்கு பொறுப்பேற்க வைக்கக் கூடாது. அனைத்து பரிமாற்றங்களுக்கும் சட்டம் என்னையே பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும்.
நான் யாரையும் ஏமாற்ற நினைத்ததில்லை. ஒரு தொழிலதிபராக நான் தோற்று விட்டேன். என்னை ஒரு நாள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நிறுவனத்தின் அனைத்து சொத்துகள், அவற்றின் தற்போதைய மதிப்பு குறித்து பட்டியலிட்டுள்ளேன். புதிய நிர்வாகத்தில் அனைவரும் சிறப்பாக பணியற்ற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு சித்தார்த்தா கடிதத்தில் எழுதியிருக்கிறார். எனவே, அவர் மரணத்தை நாடிச் சென்றிருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், மங்களூரு ஆற்றின் பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
'72 ஆண்டுகளில் 32 முதல்வர்களை கண்ட கர்நாடகா' - 5 ஆண்டு நீடித்தது 4 பேர்; எடியூரப்பா கதை பெரும் சோகம்