தமிழக அரசியலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது காமெடி நடத்தி வந்த ஜெ. தீபா எனும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், இப்போது ஒரேயடியாக அரசியலில் இருந்து முழுக்கு போடுவதாகக் கூறி காமெடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இனி கணவருடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி குழந்தை, குட்டிகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன்.
எனவே இனியும் பேரவை, அமைப்பு,கட்சி, கிட்சி என்று யாரேனும தொந்தரவு செய்தால் போலீசிலும் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்றும் மிரட்டல் தொனியில் ஜெ. தீபா கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தவுடன், திடீரென தமிழக அரசியலில் வாராது வந்த மாமணியோ என்பது போல் ஜெ. தீபா அரசியல் களத்தில் குதித்தார். அப்போது அதிமுகவில் நிலவி வந்த பூசலால், ஜெயலலிதாவைப் போன்றே தோற்றமளித்த ஜெ. தீபா பக்கமும் ஒரு கூட்டம் சேர்ந்தது. ஆத்தாடி... அச்சு.. அசலா.. அம்மா ஜெயலலிதாவே தான் என்று கிராமப்புறத்தில் உள்ள அப்புராணி அதிமுக தொண் டர்களும் ஜெ. தீபா அம்மா பக்கம் அணி திரண்டனர்.
சென்னையில் வீட்டுப் பால்கனியில் அவ்வப்போது காட்சி தந்த ஜெ. தீபாவைக் காண ராப்பகலாக தொண்டர்கள் திரண்டு போக்குவரத்தே ஸ்தம்பித்தது என்றால் சும்மாவா? அது மட்டுமா? அந்தச் சமயம், அதிமுகவில் இருந்து பிரிந்து தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓபிஎஸ் டீம் கூட ஜெ. தீபாவை கூட்டணிக்கு அழைப்பு விட்டதென்றால் பார்த்துக் கொள்ளலாம்.அந்த அளவுக்கு தமிழக மக்கள் செல்வாக்கு இருப்பதைக் கண்ட ஜெ. தீபா, முதலில் தீபா பேரவை என ஆரம்பித்து அதன் பின் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனத் தொடங்கினார்.
அதன் பின்தான் கலக்கல் காமெடிகள் தமிழக அரசியல் அரங்கில் களைகட்டின. நிர்வாகிகள் என்ற பெயரில் தன் கணவர் மாதவன், குடும்பத்தில் ஆல் இன் ஆல் ஆக இருந்த கார் ஓட்டுநர் ராஜன் ஆகியோர் தான் எல்லாமுமாகப் போய்விட்டது. இவர்களுக்குள் குடுமிப் பிடிச் சண்டையும் நாறியது.
திடீர், திடீரென 2 வருடங்களாக அரசியலில் திடீர், திடீரென முகம் காட்டுவதும், தேர்தலில் நிற்கப் போவதாக சவடால் விட்டு விட்டு ஒரேயடியாக காணாமல் போவதும் என காமெடி தர்பார் நடத்தி வந்தார் ஜெ.தீபா .
சில மாதங்களுக்கு முன்பு தமது பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகக் கூறி அமைதி காத்து வந்த ஜெ. தீபா, இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டு தமிழக அரசியலையே கதிகலங்கச் செய்து விட்டார். அந்தப் பதிவில், எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. எனது குடும்பம்தான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக்கொண்டு கணவருடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. எனக்கு அரசியலே வேண்டாம். என்னை தொலைப்பேசியில் அழைக்காதீர்கள்.
0மீறி அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன். அதேபோல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அதிமுகவில் இணையலாம். முழுமையாக பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். எனவே தீபா பேரவை என்ற பெயரில் யாரும் என்னை தொந்தரவு செய்து கஷ்டப்படுத்தாதீர்கள் என ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
ஜெ. தீபாவின் இந்தப் பதிவைக் கண்ட பலரும் வயிறு குலுங்கச் சிரித்தது மட்டுமின்றி, கலக்கல் காமெடி செய்து ஜெ.தீபாவை கலாய்க்கவும் செய்து விட்டனர். இதனால் ஜெ. தீபா என்ன நினைத்தாரோ சிறிது நேரத்திலேயே தான் போட்ட பேஸ்புக் பதிவை டெலீட் செய்து விட்டார்.
கொசுறு தகவல் : ஜெ.தீபா பேரவையில் முக்கியப் பதவிகள் வழங்குவதாக பலரிடமும் ஜெ. தீபா கணவர் மாதவனும், டிரைவர் ராஜனும் எக்கச்சக்கமாக பணம் வாங்கியிருந்தனராம். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்க, மாதவனும், ராஜனும் மிரட்டல் விடுத்தனராம். இதனால் ஆத்திரத்தில் ஜெ. தீபாவை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பலரும் கன்னாபின்னாவென்று வறுத்தெடுத்து வந்தனராம். இது கடந்த சில நாட்களாக அதிகரித்து விடவே மன உளைச்சலில் ஜெ. தீபா இந்தப் பதிவைப் போட்டு அரசியலுக்கு முழுக்கு என்று அறிவித்ததுடன், மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் 'திடுக்' திருப்பம் ; திமுக பெண் நிர்வாகியின் மகன் கைது