காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து அமித்ஷா அறிவிப்பு - ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

Article 370 to be scrapped in jammuKashmir, Amit Shah announced in parliament

by Nagaraj, Aug 5, 2019, 13:10 PM IST

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை 1954-ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி அந்த மாநிலத்தில், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சொத்துக்களை வாங்க முடியாது. அதே போல் குடியேறவும் முடியாது. அம்மாநிலத்துக்கென தனி குடியுரிமைச் சட்டமும் வழங்கப்பட்டிருந்தது. அம்மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் செய்தால் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்பது போல் பல்வேறு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என பாஜக பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்தது.இந்நிலையில் அதற்கான தீர்மானத்தை இன்று கொண்டு வந்து 370 மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது -

இதற்காக மத்திய அரசு கடந்த வாரமாக, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்து பெரும் பீதியை ஏற்படுத்திவிட்டது. காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவும், குண்டு வெடிப்பு சதி நடக்கப் போகிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக படைகள் குவிக்கப்படுகிறது என்பது போன்ற தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் கடந்த ஒரு வாரமாகவே சஸ்பென்ஸ் நீடித்தது.

இந்நிலையில் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி காஷ்மீரில் கொந்தளிப்பான சூழல் நிலவும் என்பதால் நேற்று மாலை முதல் விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறின. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மகபூபா முப்தி உள்ளிட்ட பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்த சுற்றுலா பயணிகளும், யாத்திரை சென்றவர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் முழுவதும் தெருக்களில் படை வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மத்திய அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்னவாக இருக்குமோ? என்ற கேள்விக்குறியுடன் காஷ்மீர் மாநிலமே பீதியில் அமைதிக்காடாக காட்சியளித்தது.

இந்நிலையில் தான் இன்று காலை பிரதமர் மோடியின் இல்லத்தில் மத்திய அமைச்சரவை அவசரமாக கூடியது. இதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்க முடிவு செய்யப்பட்டு, அதனை ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீர்மானமாக கொண்டு வந்தார்.

மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியம் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கப்படும் என்ற அறிவிப்பையும் அமித் ஷா வெளியிட்டார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கும், அதற்காக காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு அடக்கு முறையை கையாண்டதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் சபையில் கூச்சல் குழப்பமானது. ஆனாலும் விடாப்படியாக தீர்மானத்தை அமித் ஷா தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை; கவர்னரை சந்தித்த உமர் பேட்டி

You'r reading காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து அமித்ஷா அறிவிப்பு - ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை