காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை கவர்னரை சந்தித்த உமர் பேட்டி

by எஸ். எம். கணபதி, Aug 3, 2019, 16:14 PM IST
Share Tweet Whatsapp

‘காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னரை சந்தித்த பின்பு கூறியுள்ளார்.

அமர்நாத் யாத்திரையில், புலவாமா தாக்குதலைப் போன்று தீவிரவாதிகள் திடீர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தலாம் என்று கருதி, காஷ்மீரில் கடந்த வாரம் ராணுவம் குவிக்கப்பட்டது. குறிப்பாக, அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் 32 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்பின், கடந்த 25ம் தேதியன்று மேலும் 10 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக வந்து இறங்கினர். இவர்களையும் சேர்த்து காஷ்மீரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுக்களாக சென்று, வீடு, வீடாக சோதனை நடத்தினர். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள், நிதி வசூலித்து கொடுப்பவர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த ரெய்டு நடந்தது.

தொடர்ந்து, காஷ்மீருக்கு மேலும் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்தனர். அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்திருப்பதால், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. அது மட்டுமில்லாமல், அமர்நாத் செல்லும் யாத்ரீகர்கள் அனைவரும் தங்கள் பயணத்தை ரத்து செய்து, காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.

இதனால், காஷ்மீர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீருக்கு விசேஷ சலுகை, சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகள் 35 ஏ, 370 ஆகிய பிரிவுகளை ரத்து செய்ய மோடி அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அது காஷ்மீரில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதை மத்திய உள்துறை மறுத்தது.

அதன்பின், ஜம்முவை தனி மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியத்தை தனித்தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இதை சுதந்திர தின விழாவில் மோடி அறிவிப்பார் என்றும் ஒரு தகவல் உலா வந்தது. இப்படி அடுத்தடுத்து பல்வேறு யூகங்கள் வந்து கொண்டிருப்பதால், காஷ்மீர் மக்களிடையே பதற்றத்துடன் பீதியும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தனது கட்சி நிர்வாகிகளுடன் ஒரு குழுவாகச் சென்று இன்று மதியம் கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டி வருமாறு:

கவர்னரிடம் என்ன நடக்கிறது என்று கேட்டோம். அவர் வழக்கமான அச்சுறுத்தல்கள் காரணமாகவே ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். பிரிவு 35ஏ, 370 ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யவிருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று மறுத்தார். காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு அறிக்கையாக தெரிவிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டோம்.

இவ்வாறு உமர் கூறினார். மேலும், முன்னாள் முதல்வரான அவர் கூறுகையில், ‘‘நான் அதிகாரிகளிடம் நிலவரம் குறித்து விசாரித்தேன். அவர்கள் ஏதோ நடக்கப் போகிறது என்றும் அது என்னவென்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறுகிறார்கள்’’ என்றார்.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கை என்னவென்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரலாம்.

சட்டப்பிரிவு 35ஏ ரத்தானால் காஷ்மீரில் கடும் விளைவு; மெகபூபா முப்தி எச்சரிக்கை


Leave a reply