காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த பூசல் அமைதி காக்கும் ராகுல் காந்தி

by Nagaraj, Aug 6, 2019, 12:25 PM IST

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் ஆதரவுக் குரலும் எழுந்து பெரும் குழப்பத்தில் உள்ளது அக்கட்சி. தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் இன்னும் அப்பதவியில் நீடிக்கும் ராகுல் காந்தியும் தமது கருத்தை வெளிப்படுத்தாமல் உள்ளதும் அக் கட்சியை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் கொத்துக் கொத்தாக படைகளைக் குவித்து நாடு முழுவதும் பெரும் சஸ்பென்ஸை ஏற்படுத்தியது மத்திய அரசு .இதற்கெல்லாம் காரணம் என்ன? என்பதற்கு நேற்று ஒரே நாளில் விடை கூறி விட்டது மத்திய அரசு . காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக்குவது என்ற அறிவிப்பை வெளியிட்டு, மாநிலங்களவையில் தீர்மாவைகளையும் நிறைவேற்றி விட்டது மத்திய அரசு .

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுமைக்குமே ஆதரவு, எதிர்ப்பு என்ற இரு வேறு கருத்துகள் பரவலாக எழுந்துள்ளது. பாஜக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவை முழு வீச்சில் எதிர்க்கும் பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம்,ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளன. இது மட்டுமின்றி காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதும் நேற்று அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் இரு வேறு கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தையே உருவாக்கியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் காங்கிரசில் இப்போது தலைமைப் பதவி காலியாக இருப்பதும், மூத்த தலைவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய முக்கிய தலைவர்கள் இல்லாமல் போனதும் தான் என்று தெரிகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பின் கடந்த 73 ஆண்டுகளில் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து இப்போது பிரதான எதிர்க் கட்சியாக உள்ள கட்சி காங்கிரஸ்.இப்போது நாட்டின் அதி முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள காஷ்மீர் விவகாரத்தில் மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்க வேண்டிய காங்கிரஸ், இப்போது தனது கட்சியினரிடையே ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் தத்தளிப்பது கண்கூடாக தெரிகிறது.

இது குறித்து காங்கிரஸின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், காஷ்மீர் விவகாரம் குறித்து எங்களுக்கு முன்னரே தெரியவில்லை என்றெல்லாம் கூற முடியாது. கடந்த ஒரு வாரமாக நாங்கள் அது குறித்துதான் விவாதித்து வருகிறோம். எங்களுக்குள் சிலருக்கு மாற்றுக் கருத்து இருப்பது உண்மைதான் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

நேற்று மாநிலங்களவையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா? என்று விவாதிக்கப்பட்டதாகவும், இறுதியில் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாசியுள்ளன. குறிப்பாக 370வது சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு பலரும் காங்கிரசுக்குள் எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

ஆனால் காங்கிரஸின் மூத்த நிர்வாகி ஜனார்தன் திவேதி யோ, எனது ஆசான் ராம் மனோகர் லோகியா, முதலில் இருந்தே 370-வது சட்டப் பிரிவுக்கு எதிராகத்தான் இருந்தார். என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு தேசிய தியாகமாகும். சுதந்திரத்தின் போது செய்யப்பட்ட தவறு இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது என்று கருத்து கூறியுள்ளார்.

இதே போல் நேற்று மாநிலங்களவை காங்கிரஸ் கொறடாவான புபனேஷ்வர் காலிதா, கட்சியிலிருந்து வெளியேறியதும் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு என்றே கூறலாம். காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸின் நிலைப்பாடு தற்கொலைக்கு சமமானது. நாட்டின் எண்ண ஓட்டத்துக்கு எதிரானது. எனவே அதில் ஒரு பங்காக நான் இருக்க விரும்பவில்லை என்று கூறி கொறடா உத்தரவு பிறப்பிக்க மறுத்து அவர் கட்சியிலிருந்தே வெளியேறி விட்டார்.

இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்ட ராகுல் காந்தியும் கட்சியில் பட்டும் படாமல் செயல்பட்டு வருவதும் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு என்றே கூறலாம். இப்போது காஷ்மீர் விவகாரத்திலும் ராகுல் காந்தி, தனது கருத்தை இன்னமும் வெளிப்படுத்தாமல் அமைதி காக்கிறார். கட்சிக்குள்ளேயே காஷ்மீர் பிரச்னையில் இரு வேறு கருத்து இருப்பது குறித்து விவாதிக்க கட்சியின் காரிய கமிட்டி கூட்டப்படுமா? என்று ராகுலிடம் கேட்டதற்கு, நான் கட்சியின் தலைவர் இல்லை. எனவே, அது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரசில் தற்போது நிலவி வரும் இத்தகைய குழப்பங்களை எல்லாம் கருத்தில் கொண்டே, மத்திய பாஜக அரசு, முதலில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியது. இப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநிலத்தை இரண்டாக பிரிப்பது என்பதிலும் தீவிரம் காட்டி பெரும் எதிர்ப்புகள் இன்றி வெற்றியும் பெற்றுவிட்டது என்று கூறலாம்.

இதற்கிடையே காங்கிரசுக்குள் நிலவும் குழப்பத்திற்கு தீர்வு காண சோனியா காந்தி சில முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று காலை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.

காஷ்மீர் விசேஷ அந்தஸ்து ரத்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்; உமர் அப்துல்லா எச்சரிக்கை


Leave a reply