காஷ்மீருக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்குவதற்கான தீர்மானமும், மறுசீரமைப்பு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்படுகிறது.
மக்களவையில் மசோதாக்களை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இதை அந்த மாநிலமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்திய எல்லைக்குள்தான் வருகிறது. எல்லா சட்டங்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தும் என்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக எந்த சட்டத்தையும் நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த மாநிலத்துக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளோம்’’ என்று கூறினார்.