மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடல் நேற்று நள்ளிரவே டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உறவினர்களும், பாஜக மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுஷ்மா வீட்டருகே உள்ள ஜந்தர் மந்தரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சுஷ்மா உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி அஞ்சலி செலுத்திய போது கண் கலங்கினார். சுஷ்மாவின் மறைவு தமக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதே போன்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் சுஷ்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளின் தூதர்களும் சுஷ்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுஷ்மாவின் உடல் அவரது வீட்டில் இருந்து நண்பகல் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் லோதிரோடு மின்மயானத்தில் சுஷ்மாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.
சுஷ்மாவின் மறைவுக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தும் வகையில் டெல்லியில் 2 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
'25 வயதிலேயே அமைச்சர் பதவி'- அரசியலில் ஜொலித்து உச்சம் தொட்ட சுஷ்மா