இந்திய அரசியலில் பிரகாசமாக ஜொலித்து உச்சங்களை தொட்ட ஒரு சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் குறிப்பிடத்தக்கவர். இளம் வயதிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்த சுஷ்மா, தனது 25 வயதிலேயே அரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாகி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். அதன் பின்னர் 7 முறை எம்பியாகி, மத்திய அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டு தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்த சுஷ்மாவின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம்.
அரியானா மாநிலம் அம்பாலாவில் 1952-ம் ஆண்டு பிறந்த சுஷ்மா, சமஸ்கிருதம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டப் படிப்பை முடித்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்த போது ஜனசங்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
சட்டப்படிப்பை முடித்ததும் 1973-ம் ஆண்டில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரானார். அவசர நிலைக்குப்பின் பாஜகவில் இணைந்த சுஷ்மா, அரியானா மாநில அரசியலில் கவனம் செலுத்தினார். 1977-ல் தனது 25-வது வயதிலேயே அரியானா சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏவாக காலடி எடுத்து வைத்தார்.
பாஜகவில் சுறுசுறுப்பாக செயல்பட்ட சுஷ்மாவை, அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அரியானா மாநில பாஜக தலைவர் பதவி தேடி வந்தது. அரியானா மாநில அமைச்சராகவும் இரு முறை பதவி வகித்த சுஷ்மா, பின்னர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தினார்.
1990-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேசிய அரசியலுக்குள் நுழைந்த சுஷ்மா 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக 1998ல் பதவி வகித்துள்ளார்.
வாஜ்பாய் மற்றும் மோடி ஆகியோர் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 5 முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள சுஷ்மா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த முறை மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது திறம்பட செயல் பட்டு உலகத் தலைவர்கள் பலரின் பாராட்டையும் பெற்றவர் சுஷ்மா ஸ்வராஜ். சிரித்த முகத்துடன், ஆணித்தரமான தனது பேச்சுக்களால் அனைத்துக் கட்சியினரையும் வெகுவாக கவர்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ்.
இந்திய அரசியலில் ஜொலித்த முக்கியமான பெண்மணிகளில் ஒருவராக பெரும் புகழுடன் திகழ்ந்து இன்று மறைந்து விட்டார் சுஷ்மா ஸ்வராஜ்.
சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் நேரில் அஞ்சலி