‘காஷ்மீரில் வன்முறைகள் நடப்பதாக கூறும் ராகுல்காந்திக்கு கவர்னர் சத்யபால் மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘விமானம் அனுப்புகிறேன், நேரில் வந்து பார்த்து விட்டு பேசுங்க...’’ என்று அவர் ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவப் படைகள் ரோந்து சுற்றி வருகின்றன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. பக்ரீத்தை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்பட சில நகரங்களில்் நேற்று ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
இதற்கிடையே, ஸ்ரீநகரின் சில பகுதிகளில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடப்பதாகவும், கல்வீச்சு, தடியடி சம்பவங்கள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, ‘‘காஷ்மீரில் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாக செய்திகள் வந்துள்ளது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை மோடி அரசு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், ‘‘ராகுல் காந்தி இப்படி பேசுவதற்கு கூச்சப்பட வேண்டும். இங்கு வன்முறை எதுவும் நடக்கவில்லை. நான் விமானம் அனுப்புகிறேன். ராகுல் காந்தி நேரில் இங்கு வந்து பார்த்து விட்டு பேசலாம். நீங்கள் பொறுப்பான அந்தஸ்தில் உள்ள மனிதர். எதையும் பொறுப்புடன் பேச வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.