காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது அன்றே முடிவுக்கு வந்து விட்டது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரீஷ் வர்தன் சிரிங்கலா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தராக தான் பணியாற்றத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜூலை 22ம் தேதி கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், அப்போது இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டார். காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு இம்ரான்கான் கேட்டுக் கொண்டதாகவும், அதே போல் பிரதமர் மோடியும் ஏற்கனவே கோரிக்கை விடுத்ததாகவும் டிரம்ப் கூறினார்.
இதை உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. பிரதமர் மோடி ஒரு போதும் அப்படி உதவி கேட்பவர் அல்ல என்றும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும் என்றும் அறிவித்தது. காஷ்மீர் விஷயத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும் என்பது இந்தியா பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் கொள்கை என்றும் கூறியது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரீஷ் வர்தன் சிரிங்கலா, அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு ஆதரவான பாக்ஸ் நியூஸ் டி.வி.க்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ‘‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தை என்ற கொள்கையை மாற்றிக் கொள்ளாது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு அன்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்காவின் உதவியை இந்தியா கேட்காது’’ என்று தெளிவுபடுத்தினார்.
'காஷ்மீர் பிரச்னையில் பாக். உடன் மட்டுமே பேச்சுவார்த்தை' இந்தியா திட்டவட்டம்