எந்தவித நிபந்தனைகளும் இன்றி காஷ்மீருக்கு வரத் தயார்; எப்போ வரலாம்? என்று அம்மாநில ஆளுநருக்கு சுளீர் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. இதனால் இருவருக்குமிடையேயான வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது போன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், அம்மாநில நிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக சில கருத்துகளை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், தவறான தகவல்களை ராகுல் காந்தி பரப்புகிறார். வேண்டுமானால் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்கிறேன். அவர் காஷ்மீரிருக்கு நேரில் வந்து நிலவரத்தை பார்வையிடலாம் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆளுநர் மாலிக் அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே அதை ஏற்பதாக ராகுல் காந்தி ரியாக்சன் காட்டினார். விமானம் எதுவும் வேண்டாம். எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவுடன் காஷ்மீர் வருகிறேன். எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காமல், சுதந்திரமாக அங்குள்ள மக்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும், ராணுவ வீரர்களையும் சந்திக்க வழிவகை செய்தால் போதும் என ராகுல் கூறியிருந்தார்.
ராகுல்காந்தியின் இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்த ஆளுநர் மாலிக், காஷ்மீரை வைத்து ராகுல் காந்தி அரசியல் செய்யப் பார்க்கிறார். எதிர்க்கட்சி தலைவர்களிடமும் மக்களிடமும் பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார். காஷ்மீர் வருவதற்கு, தேவையில்லாத நிபந்தனைகளையும் விதிக்கிறார். இதனால் இனிமேல் ராகுல் காந்திக்கு அழைப்பு விடப் போவதில்லை என்று மாலிக் கூறி விட்டார்.
இவ்வாறு ராகுல் காந்தியும், காஷ்மீர் ஆளுநர் மாலிக்கும் அடுத்தடுத்து வார்த்தைப் போர் நடத்தி வரும் நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து பதிவிட் பிருந்தார்.அதில், ராகுல் காந்தி நிபந்தனை விதிக்கிறார் என காஷ்மீர் ஆளுநர் கூறுவது அபத்தமானது. சுதந்திரமாக அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று தான் ராகுல் கேட்டுள்ளார். இது எப்படி நிபந்தனையாகும்? ராகுல் காந்திக்கு ஆளுநர் விடுத்த அழைப்பில் உண்மை இருப்பதாக தெரியவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே ஆளுநர் மாலிக்குக்கு பதிலளித்து ராகுல் காந்தி இன்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார், அதில், டியர் மாலிக் ஜி, நான் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் இயலாமையில் தெரிவித்திருந்த பதிலை பார்த்தேன். காஷ்மீருக்கு வருமாறும், அந்த மக்களை சந்திக்கலாம் என நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்கிறேன். அதற்காக எந்தவிதமான நிபந்தனையும் விதிக்கப் போவதில்லை; எப்போது நான் வரலாம்? என்று சுளீரென கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் காஷ்மீர் விவகாரத்தில் ஆளுநர் மாலிக் மற்றும் ராகுல் காந்தி இடையேயான வார்த்தைப் போர் இப்போது உச்சத்தை எட்டி பரபரப்பாகியுள்ளது.
விமானம் வேண்டாம்; அனுமதி மட்டும் கொடுங்கள் : காஷ்மீர் ஆளுநரின் சவாலுக்கு ராகுல்காந்தி பதிலடி