அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் விஐபி தரிசனம் நாளை முடிகிறது

by எஸ். எம். கணபதி, Aug 14, 2019, 13:00 PM IST

அத்திவரதர் இன்று பிங்க் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நாளையுடன் வி.ஐ.பி. தரிசனம் முடிவுக்கு வருகிறது. வரும் 17ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.

அத்திவரதர் தரிசனத்தின் 44-வது நாளான இன்று இளம் பச்சை மற்றும் இளம் சிவப்பு நிற பட்டாடை அணிந்து, மனோரஞ்சித மாலை, துளசி மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். பக்ரீத் விடுமுறை நாளான கடந்த திங்கட்கிழமை மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் காஞ்சி நகரமே திக்குமுக்காடிப் போனது.

அடுத்த 2 நாட்களிலும் மூன்று, மூன்றரை லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
இன்னும் 2 நாட்களே இந்த வைபவம் நடைபெற உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வந்து அத்திவரதரை தரிசித்தார்.

அத்திவரதர் தரிசன வைபவத்தின் 45ம் நாளான இன்று காலையில் அத்திவரதர் பிங்க் கலரில் பட்டாடை உடுத்தி, ராஜ மகுடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இன்றும் அதிகாலை முதலே, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இன்றும் பல வி.ஐ.பி.க்களும் வந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். நாளையுடன் வி.ஐ.பி. தரிசனங்கள் முடிவுக்கு வருகிறது. நாளை மறுநாளுடன் பக்தர்கள் தரிசனம் முடிகிறது. வரும் 17ம் தேதியன்று அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு


Leave a reply